இந்தியப் புதையல் ஒரு தேடல்
இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html கடந்த 1930களில் இந்தியாவில் நிலவி வந்த ஆன்மிக நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் பால் ப்ரன்டன். முதலில் வட மாநிலங்களில் உள்ள யோகிகள், சாதுக்கள் ஆகியோரைச் சந்தித்து விட்டு, தென் இந்தியாவை நோக்கிப் பயணப்பட்டு, வழியில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை, ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியைச் சந்திக்கிறார். பால் ப்ரன்டன், இங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக ஞானம் மூலம் வியக்கத்தக்க ஆன்மாநுபூதி பெறுகிறார் அவர். தனது பயணத்தில் பல மகான்களைச் சந்தித்து, ஆன்மிகம் குறித்து, பேசியவைகளைப் படித்துப் பார்க்கும்போது, புரியாத பல விஷயங்கள் நமக்குப் புரிகிறது. நமது வேதகால உபநிஷதங்களின் ஆழமான கருத்துகளை, கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றை அழகாக விவரித்தும் எழுதியிருக்கிறார் பால் ப்ரன்டன். தமிழில் மொழிபெயர்த்துள்ள புவனா பாலு பாராட்டுக்குரியவர். நூலை அழகுறு, நிறைய புகைப்படங்களுடன் சிறப்பாகத் தயாரித்திருக்கிறது கண்ணதாசன் பதிப்பகம். -ஜனகன். நன்றி: தினமலர், 18/5/2014.
—-
சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ.
திருவையாறு அரசர் கல்லூரியில், 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சான்றோர் எச். வேங்கடராமன். அவர் உருவாக்கிய மாணாக்கர்களில் பலர் இன்று பெரும் பேராசிரியர்கள், அவர்களில் பனி ஓய்வு பெற்றோர் பலர். அவர் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகும். அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி பிறரால் எழுதப் பெற்ற கட்டுரைகள் சிறந்த கருத்துகளைக் கொண்டவை. நாளிதழில் அவர் எழுதிய நூல் மதிப்புரை பகுதிகள் இந்நூலில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன, நற்றிணை போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ள இவ்வறிஞரின் கடமை உணர்ச்சியும், தன்னலம் பாராமல் பிறர்க்கெனவே வாழ்ந்த பண்பும் படிப்போரை வியக்கச் செய்கின்றன. அவருடைய மக்கள் அளிக்கும் செய்திகளும், நூலில் இடம் பெற்றுள்ளன. போற்றிப் பாதுகாக்கப் பெற வேண்டிய இந்த நூலை அவருடைய திருமகளார் பெருமுயற்சியுடன் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழுணர்வு, சமூக உணர்வு முதலியவற்றால் உயர்ந்து, பண்பாட்டின் இமயமாய்த் திகழ்ந்த பேராசிரியர் எச். வேங்கடராமனின் நினைவு மலர் தமிழ் மணக்கும் அழகுமலர். -பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 18/5/2014.