தங்க விலை ரகசியம்
தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ.
சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் அரட்டை, கொசுத் தொல்லை என்று ஒன்றுவிடாமல் தொகுத்து சிரிப்பு வெடியோடு சொல்கிறார். நல்ல தகவல்கள். உருப்படியான யோசனைகள். படித்து முடித்ததும் மனசு லேசாகிறது. நன்றி: குமுதம், 12/11/2014.
—-
சாதனை சந்திப்புகள், தென்றல் நிலையம், சிதம்பரம், பக். 176, விலை 75ரூ.
சாதனை படைத்த பெண்கள். அவர்கள் கடந்து வந்த பாதை. பெண்களின் அனுபவரீதியான முன்னேற்றக் கருத்துக்கள், பால் வியாபாரம் செய்யும் பெண் முதல் இசைக் கலைஞர்கள் வரை. அடித்தட்டுப் பெண்கள் முதல் வசதியான பெண்கள் வரை சாதிக்கத் துடிக்கும் செயல்கள். அவர்கள் வழியாக முன்னேற்ற வழிகள் என்று ஒரு பெரிய கலவையாகத் தந்துள்ளார். அப்பெண்களை நேரடியாக சந்தித்து பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் சினிமா, மருத்துவம், பார்வையற்றோர் சாதனை என்று பொது அறிவை அள்ளித்தந்துள்ளார். நன்றி: குமுதம், 12/11/2014.