தனிநாயக அடிகளாரின் படைப்புகள்
தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பழைய எண் 63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் தவழ்ந்து வருவதற்கும், உலகின் பல்வேறு மொழி பேசுபவர்களும் தமிழைப் படிப்பதற்கும் காரணம்… தனிநாயக அடிகளார். உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கான தூண்டுதலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலரும் இன்று தமிழ் ஆய்வில் ஈடுபடக் காரணமும் இவரே. தமிழை உலக மொழியாக மாற்றிய உன்னத மனிதர்தான் ஈழத்தைச் சேர்ந்த தனிநாயகம் அடிகளார். அவரது ஒருசில கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் இவர். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் படிக்கும்போது தமிழைப் படிக்கவே இல்லை. ஐரோப்பிய மொழிகளைப் படிப்பதில்தான் அதிக ஆர்வமாக இருந்தார். ஈழத்தில் இருந்து தமிழகம் வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தமிழ் ஆர்வம் துளிர்த்தது. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற ஆய்வேட்டைத் தயாரித்தார். பிறகு உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தமிழ் பற்றிய ஆய்வுரைகள் நிகழ்த்தினார். அதுவரை இந்தியா இலங்கையில் மட்டுமே தமிழ் ஆய்வுகள் நடந்தன. தமிழ் கல்ச்சர் என்ற ஆய்விதழைத் தொடங்கினார். இதன் காரணமாகத்தான் உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. அதன்மூலம் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன. தனியொரு மனிதராக இருந்து தமிழைத் தரணி எங்கும் கொண்டுசென்றவர் தனிநாயகம் அடிகளார். தான் சென்ற அனைத்து நாடுகளைப் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், உலக வரலாற்றுச் சுருக்கம், கிரேக்கம், ரோமிய, புத்த ஒழுக்க இயல்புகளையும், திருக்குறளையும் ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரைகள் திருக்குறளின் பெருமையையும் தனிநாயகம் அடிகளாரின் புலமையையும் வெளிப்படுத்துகின்றன. வேற்று நாடுகளில் குடியேறியிருக்கும் தமிழர், தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்களுடைய சூழ்நிலை காரணமாக இருப்பதால், அந்நாடுகளின் மொழிகள் வாயிலாகவும், தமிழின் புகழைப் பரப்புவது நம் கடமை. வேற்று நாடுகளுக்கு, தமிழ்நாட்டில் இருந்து கல்வியின் பொருட்டும் வணிக மற்றும் அரசியல் நோக்கிலும் செல்லும் தமிழர்கள், தமிழ் வரலாற்றையும் தமிழ் இலக்கியங்களையும் நன்குணர்ந்து செல்வாராயின், அவரும் தமிழ்க் கலைத்தூதைப் பெரிதும் நிகழ்த்துவதற்கு வழிகளைக் காண்பர் என்று, தனிநாயகம் அடிகளார் சொல்வதைப் பின்பற்றினால் உலக நாடுகள் முழுவதும் தமிழ் தழைக்கும். தமிழ் பற்றிப் பேசுவது என்பது தமிழின் சுவையைச் சொல்வது, பழம்பெருமை பேசுவது என்று இல்லாமல் ஒழுக்கம், பண்பாடு குறித்த கல்வியாகவும் அமைய வேண்டும் என்கிறார் அடிகளார். தமிழர் பண்பாட்டில் பக்தி எங்ஙனம் சிறந்து விளங்கியதோ நீதியும் அவ்வாறு சிறந்து விளங்கியுள்ளது. ஒழுக்கமென்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழ்க்கைக்குப் பெரும் அழகையும், மனநிறைவையும் நல்குகிறது என்கிறார். நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில், தனிநாயகம் அடிகளார் சொல்லும் கட்டளை தமிழர்கள் தங்கள் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 2/10/2013.