தமிழன் குரல்
தமிழன் குரல், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 60ரூ.
தமிழர்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் ம.பொ.சிவஞானம் அக்கறையுடன் எழுதியிருக்கும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர்களின் சமயக் கொள்கை, தேசியக் கொள்கை, தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசுவோரின் பழக்க வழக்கங்கள், சித்தூர் ஜில்லாவின் வரலாறு, சித்தூர் முதல் திருப்பதி வரை பெரும்பாலோர் தெலுங்கு பேசுவோராயிருப்பதற்கான காரணம், முத்தமிழ் வளர்த்த கோயில்கள் மூடத்தனத்தை வளர்க்கும் கூடங்களாக மாறிப்போனது. தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தாத தமிழ் நாடகங்கள் இப்படி எல்லாத் துறைகளையும் பற்றி தெளிவாகவும் அழுத்தமாகவும் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் ம.பொ.சி. இந்தியைப் பொது மொழியாக்குவது ஏற்புடையதல்ல என்கிற கருத்தை தகுந்த காரணங்களுடன் நிறுவியிருக்கிறார். தமிழகத்தில் இந்திமொழியைத் திணிக்க முயற்சிக்கும் போக்கு பற்றி குறிப்பிடும்போது, நாம் இந்தி மொழியையும் வேறு எந்த மொழியையும் விரும்பிக் கற்போம். அதனால் வரும் பயனைப் பெறுவோம். ஆனால் அரசியல் செல்வாக்கைக் கொண்டு பிறமொழியைத் தமிழகத்தில் பிடிவாதமாகப் பிற இனத்தார் புகுத்த இடந்தர வேண்டாம் என்று குறிப்பிடுகிறார். கட்டுரைகளின் இடையிடையே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம் முதலிய பல நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார். எல்லாமே ரசிக்கத்தக்கவை. நூலின் இறுதிப் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு விவரமும், திருவதாங்கூர் தமிழகம், சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள், இந்தியாவில் இனவாரி நாடுகள் போன்றவற்றின் வரை படங்களும் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தத் தமிழின் குரல்தான் தமிழ்த் தேசியத்தின் முதல் குரல் என்பதை பல கோணங்களிலும் ஆராய்ந்து பெ.சு.மணி எழுதியிருக்கும் சற்றே நீண்ட முன்னுரை முக்கியத்துவம் வாய்ந்தது. நன்றி: தினமணி, 30/6/2014.
—-
கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைஇசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது இந்தப் பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. ரத்தக்கண்ணிர் படத்தில் எம்.ஆர். ராதா தோன்றும் காட்சியில், சிதம்பரம் ஜெயராமன் பாடும் பாடல் இது. இதை எழுதிய கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மேலும் பல படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதினார். ராஜராஜன் படத்தில் வரும் நிலவோடு வான்முகில் விளையாடுதே என்ற பாடல் இவர் எழுதியதுதான். எம்.ஜி.ஆர். நடித்த அந்தமான் கைதி படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதினார். அவருடைய திரை இசைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. தொகுப்பாசிரியர் கவிஞர் பொன். செல்லமுத்துவின் பணி பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.