தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ.
தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர். கட்டடக் கலை பகுதியில் மரக்கோயில், செங்கல் கட்டடம், குகைக்கோயில், கற்றளி போன்றவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு இந்திய நாட்டுக் கட்டடக்கலையின் பிரிவுகள் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுபோன்ற பிற கலைகளைப் பற்றியும் எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு பிரிவிலும் அடங்கியுள்ள பல புதிய தகவல்கள் நூலாசிரியரின் ஆராய்ச்சி நோக்கத்தையும் ஆழ்ந்த புலமையையும் காட்டுகின்றன. உதாரணமாக, சமணர்கள் இசைக் கலையை அழித்துவிட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் இசைக் கலையைப் போற்றி வளர்த்தவர்கள். இசைக் கருவியான நாகசுரத்துக்கு அப்பெயர் வரக் காரணம் அதனைக் கண்டுபிடித்தவர்கள் நாகூர், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், யாழ் வாசிப்பதில் வல்லவனான பாணன், ஒருவனுக்கு ஓர் அரசனால் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஊர்தான் இலங்கயில் உள்ள யாழ்ப்பாணம். இப்படிப் பற்பல. தமிழில் வெளிவந்துள்ள இதை தொடர்புடைய நூல்கள் பற்றிய குறிப்புகளும், ராகங்கள் பற்றிய விளக்கங்களும் பலருக்கும் பயன்படக் கூடியவை. சிறிய நூலாயினும் செறிவான கருத்துகள் அடங்கிய நூல். நன்றி: தினமணி, 18/11/13.
—-
எல்லா உயிரும் தொழும், சாந்தி பதிப்பகம், 5, சி.பி. சாலை, இரண்டாவது சந்து, சென்னை 21, விலை 40ரூ.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் ஆசீர். பா அன்பு கணபதி, இயேசு மீது அவர் கொண்டுள்ள பக்தியை, அவர் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன. மனதைத் தொடும் நூல். நன்றி: தினத்தந்தி, 4/12/13.