தமிழில் திணைக் கோட்பாடு

தமிழில் திணைக் கோட்பாடு – எஸ்.ஸ்ரீகுமார்; பக்.126; ரூ80; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98

தமிழ் இலக்கியம் நில அடிப்படையில் அவற்றின் கூறுகளுடனும், இயல்புகளுடனும் வெளிப்பட்டது. அப்படி வெளிப்பட்ட இலக்கியங்களைத் திணை இலக்கியம் என்று அழைக்கிறோம். நிலம் சார்ந்த இயற்கையைப் பின்னணியாகக் கொண்ட மனித வாழ்வைப் புனைவதுதான் திணை இலக்கியம். திணை பற்றிய செய்திகளைக் கூறும் திணை இலக்கியங்கள் நாகரிகத்தின், பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களாகும். எனவே சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியம் என்றழைப்பதே பொருத்தமானது என்கிறார் நூலாசிரியர். இந்தத் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை அணுகி எழுதப்பட்ட கட்டுரைகள் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. “சங்க இலக்கியத்தில் மூதின் மகளிர்” என்ற தலைப்பிலான கட்டுரையில் “ஈந்து புறந்தருதல்” என்ற புறப்பாடலுக்கு ஆசிரியர் தரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. குறுநில மன்னர்களாக இருந்த சங்க கால அரசர்கள், தங்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பைப் பெருக்குவதற்காகவும், குறிஞ்சி நில பொருளியல் வாழ்க்கையை மருதநில பொருளியல் வாழ்க்கையுடன் இணைத்து விரிவுபடுத்துவதற்காகவும் நிறைய போர்களில் ஈடுபட்டனர். இதனால் வீரமும், அரசர்களுக்காக உயிரை விடுவதுமே அக்காலத்தில் மிகுந்த மாண்புடைய செயலாகக் கருதப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே ஈந்து புறந்தருதல் தாயின் கடனாகக் கருதப்பட்டது என்பன போன்ற விளக்கங்கள் நம்மை சங்க காலத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. இவ்வாறே பிற கட்டுரைகளும். குறிப்பிடத்தக்க நூல். நன்றி: தினமணி, 06.08.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *