தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள், பெ.சு.மணி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 362, விலை 175ரூ.

தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி, திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் அவற்றின் முதல் தலையங்கம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஜி. சுப்பிரமணிய ஐயர், இதழாளர் சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் இதழியியல் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. மகளிர் விழிப்புணர்வுக்காக தத்துவ போதினி, அமிர்தவசனி, சுகுண போதினி, தமிழ் மாது, சக்ரவர்த்தினி ஆகிய இதழ்கள் பெண்களுக்காக ஏற்பட்டுத்தப்பட்டன. தமிழ் இதழியல் வரலாற்றில் முதன் முதலில் 3 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்தது சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகை. 1930இல் வீறுகொண்டெழுந்த உப்பு சத்தியாகிரக இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் முதலானவை ‘திரிசங்கு’ தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தின. பாமர மக்களைக் கவரும் வகையில் நாட்டுப் பாடல்களையும், பாமர வழக்குகளையும் நகைப்பூட்டும் கருத்துப் படங்களையும் (கார்ட்டூன்கள்) இதழ்கள் பெருமளவில் பயன்படுத்தியிருப்பதும் தெரியவருகிறது. அந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்த இதழியல் தொடர்பான படங்கள், முகப்பு அட்டைகள், செய்தித் தாள்கள் குறித்து தகவல்கள் நூலின் பிற்சேர்க்கையில் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி: தினமணி, 14/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *