தமிழ் சினிமாவின் மயக்கம்
தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html
தமிழ் சினிமாவின் கடந்த பத்தாண்டுகள், பல்வேறு புதிய மாற்றங்களின் பெரும்களமாக இருந்திருக்கிறது. ஒருபுறம் தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்த புது இயக்குனர்களின் வருகை, இன்னொருபுறம் பிரம்மாண்டமான வர்த்தக சினிமாவின் பெரும் பாய்ச்சல். நுட்பமான கலாசாரப் பின்புலம் உள்ள படங்களுடன், பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட நேர்ந்தன. கௌதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் கதையாடல்களுக்குள் புதைந்திருக்கும் நுட்பமான அரசியலையும் அழகியல் சார்ந்த பிரச்னைகளையும் ஆராய்கிறது. நான் கடவுள், வழக்கு எண் 18/9, பில்லா 2, அட்டகத்தி, மாற்றான், என பல படங்களின் பின்புலத்தில் கௌதம சித்தார்த்தன் முன்வைக்கும் கருத்துகள் பலவும், எதிர்காலத்தில் வரப்போகும் படங்களுக்கும் பொருந்தக்கூடியது. நன்றி: குங்குமம், 18 பிப்ரவரி 2013.
—
செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு பண்பாட்டுச் சுற்றுலா, தொகுப்பு – எஸ். கண்ணப்பன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
நகரத்தார் சீமையின் வளங்கள், மரபுகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க நூல் இது. நடு வீட்டுக்கோலம், வள்ளுவப் பை போன்றவை நுட்பமான விவரங்களோடு எழுதப்பட்டிருப்பது சிறப்பு. நகரத்தார் வீட்டுச் சுவர்களிலும் விதானங்களிலும் பழைய காலங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்துமே மூலிகை வண்ணங்களால் உருவானவை என்றும், சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில்தான் இறக்குமதி ரசாயனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன என்றும் கண்ணப்பன் கட்டுரை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. தாலாட்டுப் பாடல்களின் தனித்தன்மையை அழகுற விளக்குகிறார் முனைவர் கண்ணாத்தாள். ஆராரோ என்று தமிழில் உள்ளது போலவே தெலுங்கிலும் பாடுகிறார்களாம். கன்னடத்தார் மட்டும் ஜோ ஜோ என்கிறார்கள் என்பது போன்ற சுவையான தகவல்கள் உண்டு. பதிப்பாசிரியர் தே.சொக்கலிங்கம், எழுதியுள்ள கட்டுரைகளும், காசி ஸ்ரீ அருசோ கட்டுரையும் அரிய செய்திகளைக் கொண்டிருக்கின்றன. பொருத்தமான நூல் தலைப்பு. நன்றி: கல்கி 17, பிப்ரவரி 2013.