தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை
தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150.
சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அடிமை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் நூல் பதிவு செய்துள்ளது. விவசாய பண்ணை அடிமை முறை குறித்து எழுதியுள்ளனர். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைமுறையில் தாழ்த்தப்பட்டோரின் நிலை படம் பிடிக்கப்பட்டுள்ளது. கீழவெண்மணிப் படுகொலை அதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில உருவாக்கப்பட்ட ஒப்பந்த கூலி முறை தற்போது வரையில் வெவ்வேறு நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் தொடர்கிறது என்பதையும் அடிமுறை முறையின் இந்திய வடிவம் தீண்டாமை என்பதையும் வரலாற்று ஆதாரங்களுடன் நூல் விவரிக்கிறது. கொத்தடிமை முறைக்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. கல்குவாரிகளிலும், அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும், விசைத்தறி, கைத்தறி தொழில்களிலும், மீன் பதப்படுத்தும் தொழிலிலும் கொத்தடிமை முறை இருப்பதை நூல் அடையாளம் காட்டுகிறது. பஞ்சாலைத் தொழிற்சாலைகளில் நவீன அடிமைமுறையின் வடிவமாகவுள்ள சுமங்கலித் திட்டம் குறித்த விரிவான தகவல்களும் ஆய்வுகளும், பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. கொத்தடிமை வரலாற்றைப் பதிவு செய்வதுடன் கொத்தடிமை முறை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், கொத்தடிமை முறையை ஒழிக்க மாற்றுத்திட்டங்களை இந்தப் புத்தகம் முன்மொழிகிறது. நன்றி: தினமணி, 9/12/13.