திராவிடநாட்டுக் கல்வி வரலாறு
திராவிடநாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர்-இரா. பாவேந்தன், கயல்கவின் பதிப்பகம், 16/25, 2வது கடல்போக்குச் சாலை, வால்மீகி நகர், திரவான்மியூர், சென்னை 41, விலை 250ரூ.
சமூக அக்கறை கொண்டவர்களுக்கான நூலே இந்த திராவிடநாட்டுக் கல்வி வரலாறு. கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானது. சாதி, மதம் கடந்து எல்லாரும் கல்வி கற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இது அனைவரின் உரிமையும்கூட… என்று நினைப்பவர்களாக இருந்தால், இந்த நூல் சர்வ நிச்சயமாக உங்களுக்கானதுதான். நமக்கானதுதான். சென்ற நூற்றாண்டை, புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொல்லலாம். உலகெங்கும் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்ததும் ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் போல்ஷ்விக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், இதனையடுத்து தேசிய விடுதலை போராட்டங்கள் உச்சத்தை தொட்டதும், நாடுகள் விடுதலை அடைந்ததும், சென்ற நூற்றாண்டின் நிகழ்வுகள். சமூக சீர்திருத்த இயக்கங்கள் முன்னிலைக்கு வந்ததும் அப்போதுதான். இதே காலகட்டத்தில்தான் இந்த நூலும் உருவானது. மூதறிஞர் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அதாவது 1955 வாக்கில், அதனை மறுத்து திராவிடன் இதழில் திராவிடப்பித்தன் என்பவரால் எழுதப்பட்ட தொடர் கட்டுரையே இப்போது தொகுக்கப்பட்டு திராவிட நாட்டுக் கல்வி வரலாறு என்னும் நூலாக வெளிவந்துள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள்தான். ஆனால், இன்றும் என்றும் பொருந்தக் கூடியது. இந்தத் தொடர் கடுடரைகள் எழுதப்பட்ட காலத்தில் நிச்சயம் போதிய கருவிகள் கிடைத்திருக்காது. ஜெராக்ஸ், இணையம், தேவையான துணை நூற்கள் என எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. ஆனால் அனைத்தையும் கடந்து மனித உழைப்பினால் உருவான இந்த தொடர் கட்டுரைகளை ஒருசேர இப்போது நூலாக வாசிக்கும்போது பிரமிப்பே ஏற்படுகிறது. தமிழகம் காலம் காலமாக கல்வி மீது தனி அக்கறை செலுத்தி வந்துள்ளது. சங்ககாலத்தில் 33 பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். அதாவது கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் ஒரு சமூகத்தின் பிடியில் அரசதிகாரம் சென்ற பிறகே குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிய பொருளாக கல்வி மாறியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் சமண மதமே கல்வியை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. அனைத்து நோய்களுக்கும் கல்வியே மருந்து என்று சொன்ன மம்மர் அறுக்கும் மருந்து நாலடியார் தரும் கல்விச் சிந்தனை. இதன் பிறகு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் மெல்ல மெல்ல மாற்றங்கள் மடங்கள் வழியே உருவானபோதும், அவையும் இன்னொரு சமூகத்துக்கு உரியதாகவே கல்வியை சுருக்கியது. 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நான்கு தென் மாநிலங்களிலும் கல்வி வளர்ந்த வரலாற்றை தக்க சான்றுகளுடனும், ஆவணங்களுடனும் இந்த நூல் விளக்குகிறது. கடந்த காலத்தின் வரலாற்றுச் சோகங்களையும் அவற்றை நாம் மெல்ல மெல்ல வென்று வந்த வரலாற்றையும் இந்த நூல் முகத்தில் அறைந்து உரைக்கிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது, எதிர்கால பயணத்துக்கு உதவும். இந்த அரிய கட்டுரைகளை தேடிக் கண்டுபிடித்து நூலாக தொகுத்திருக்கும் இரா. பாவேந்தனுக்கும் வெளியிட்டிருக்கும் கயல்கவின் பதிப்பகத்திற்கும் நன்றி. -கே. என். சிவராமன். நன்றி: தினகரன், 4/8/13.