திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்)
திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்), தெகுப்பு: மு. சீனிவாசவரதன், ஸ்ரீஅருணகிரி நாதர் விழாக்குழு, திருவண்ணாமலை 606601. பக்.104, விலை 40ரூ.
முருகன் அருள்பெற்று சந்தகவி பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழை ஓதினால் நம் தீவினைகள் ஒழிந்து வாழ்வு சிறக்கும், மனமாசைப் போக்க ஒரேவழி முருகப்பெருமானை வழிபடுவதுதான். முருகனை நினைத்துவிட்டால் பகலவனைக் கண்ட பனிபோல துன்பம் நீங்கிவிடும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழும் உயிர்த்தத்துவமும், திருப்புகழும் வாழ்வியல் தத்துவமும், திருப்புகழ் ஓதினால் தீவினை நீங்கும். திருமுரகனின் அருள் கிடைத்தால் வாழ்வியல் சிறக்கும், முருகனின் கருணை எப்படிப்பட்டது? எனப் பலவாறு எடுத்துரைத்துள்ளார். திருத்தணியில் தன் அடியார்களுக்குத் திருப்புகழின் பெருமையைக் கூறிக்கொண்டிருந்த அருணகிரிநாதரைச் சில மூடர்கள் கேலி செய்ய அவர்களுக்கு முருகனின் பெருமையையும், திருப்புகழின் சிறப்பையும் விளக்கக் கருதி, சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குங் செகுத்தவர் உயிர் குஞ்சினமாக, சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்குந் திருப்புகழ் நெருபென்றறிவோம் யாம்’ என்ற பாடலைப் பாட அதைக் கேட்ட பகைவர் தீயினால் சுடப்பப்பட்டு சாம்பலாயினர். அருகில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டு பகைவரை மன்னித்தருள வேண்ட, ‘நினைத்தது மளிக்கும் மனத்தையுமுருக்கும்‘ என்ற திருப்பகழைப் பாட அவர்கள் உயிர்பெற்று எழுந்தனர் என்ற வரலாற்றை விளக்கி திருப்புகழின் சிறப்பை மாண்பை எடுத்துரைத்திருப்பது அருமை. ஒருமுறையேனும் படித்து உய்ய வேண்டிய பக்திப்பனுவல்.
—-
வர்ம ஒடி முறிவு சரசூத்திரம் 1500 (மருத்துவச் சுவடிப் பதிப்பு நூல்), முனைவர் தே.க.ஜேம்ஸ், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 896, விலை 600ரூ.
மனித உடம்பில் 108 வர்மங்கள் உள்ளதாம். சித்த மருத்துவத்தைச் சேர்ந்த வர்மம் என்பது காற்று அல்லது நீவன் தங்குமிடம் என்று கூறப்படுகிறது. அது தடைப்பட்டால் உணர்வின்மை ஏற்படுகிறதாம். தாக்குதல், வீழ்தல் முதலியவற்றால் இவ்வர்மத் தானங்கள் அழுத்தப்பட்டால் மயக்கம், இறப்பு போன்றவை நிகழுமாம். மாற்று வர்மங்களை அழுத்துவதன் மூலம் இந்த நிகழ்வுகளைச் சரி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த வர்ம சிகிச்சையை மேற்கொள்பவர்கள் வர்மாணிகள் எனப்படுவர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மேற்குப் பகுதியிலும், திருவனந்தபுரம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ளவர்கள். இத்தகைய வர்மம் எவையெவை என்பது பற்றியும், வர்மங்கொண்டால் ஏற்படக்கூடிய விளைவுகள், அதிலிருந்து விடுபட கையாள வேண்டிய வழி முறைகள் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய வர்மாணிகள் குடும்பங்களில் பல சிறந்த மருத்துவ நூல்கள் எழுதிய ஓலைச் சுவடிகள் காணப்படுகின்றன. அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்தவரான இந்நூலாசரியர், தம் பாட்டனார் வசமிருந்த ‘வர்ம ஒடி முறிவு சூத்திரங்கள் 1500’ என்கின்ற அரிய நூலின் சுவடியை தம் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு அதற்கு உரையும், அகராதிகளும் அமைத்துள்ளார். 1500 பாடல்களில் வர்ம சிகிச்சை பற்றி விளக்கமாகக் கூறும் இந்நூல் சித்தமருத்துவத் துறைக்கு மிகவும் பயன்படக்கூடிய ஓர் அரிய மிகச் சிறந்த வரவு. நன்றி: தினமணி 10/10/2011.