திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை
திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை, மு. இராமசுவாமி, செப்பிபடைப்பகம், 20, இருளாண்டிக் காலனி, விராட்டி பத்து, மதுரை 10, பக்க.448, விலை 400ரூ.
தமிழித் திரைப்படப் பயணத்தில் இது ஒரு புதிய பாதை. நூலாசிரியர் மு. இராமசுவாமி, 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் போக்கை, வளர்ச்சியை, மாற்றத்தை, அதன் வீழ்ச்சியை, உயர்வை அவரது பார்வையில் பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் ஒரு தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவைப் பற்றிய அதன் ஊடாக பிறந்து வளர்ந்து வந்த ஒரு விமரிசகனை அடையாளப்படுத்தும் பதிவாகியுள்ளது சிறப்பு. அவரது உள்மனதை உரசிச்சென்ற திரைப் பொழுதுகளின் ஒரு பகுதி இங்கே நூலாய் வடிவம் கொண்டுள்ளது. அவர் காலத்து திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள், திரைஅரங்குகள், உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அதில் ஒரு பதிவாகியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 1/5/2013
—-
அரச பயங்கர வாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச்சாலை, மகாகவி பாரதிநகர், வியாசர்பாடி, சென்னை 39, பக். 385, விலை 170ரூ.
ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்புப் படுகொலைகளை பட்டியலிடுவதோடு, அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, ஈழத்துயர் குறித்து தமிழகத்தில் நடந்தேறிய அரசியல் நாடகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். தமிழ், தமிழர் உரிமைகள், பண்பாடு, கல்வி, சாதிவெறி, இனஅழிப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, தேசிய இனப் பிரச்சினை என்று 68 தலைப்புகளில், பிரச்னைகளின் அடி ஆழத்தைப் படிப்போரும் கண்டுணரும்விதத்தில் படைக்கப்பட்டுள்ள நூல். படிக்கப் படிக்க பொதுமைச் சிந்தனையும் புதுமைத்தேடலும் விரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 1/5/2013