தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி

தி மைக்ரண்ட் சில்க் வேவர்ஸ் ஆப் தமிழ்நாடு ஏ ஸ்டி, பேராசிரியர் சி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சக்தி கல்சுரல் அண்டு எஜுகேஷனல் டிரஸ்ட், மதுரை, பக். 448, விலை 500ரூ.

பட்டு நூல்காரர்களை வடக்கிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததேன்? சவுராஷ்டிரா என்ற பொதுவானச் சொல், இந்த ஆங்கில நூலைப் பொருத்தவரையில், Sav rastra என்ற சொல்லை, வட இந்தியாவில் வாழ்பவர்களையும், Sou rastra என்பது தென்னகத்தில் வாழ்பவர்களையும் (பட்டு நூல்காரர் குறிப்பதாகும் என்ற குறிப்போடு துவங்கிறது. ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே, உலக வர்த்தக அரங்கில், சவுராஷ்டிரர்கள் சிறந்ததொரு இடத்தைப் பெற்றிருந்தனர் (பக். 27) என்றும், தாலமியையும் மற்ற கல்வெட்டு ஆய்வுகளையும் மேற்கோள்காட்டி, வரலாற்றுப்பின்னணி நிறுவப்பட்டுள்ளது. முகமது கஜினி படையெடுப்பின் போது, சோமநாத் கோவிலைச் சார்ந்த சவுராஷ்டிர பிராமணர்கள் அங்கிருந்து அகன்று, தேவகிரியில் தங்கி, பின் விஜயநகர சாம்ராஜ்யம், கடந்த 1336ல் உருவானதும், அங்கு குடியேறி பின் திருமலைநாயக்கர் காலத்தில் மதுரைக்கு குடியேறினர் (பக். 8) என்பது பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி. தமிழகத்தில் உள்ள கைக்கோளர் மற்றும் சாலியர் இன நெசவாளர்களின் தொழிலில், அதிருப்தி அடைந்த நாயக்கர்கள், பட்டுநூல்காரர்களை வடக்கிலிருந்து, தமிழகத்திற்கு இறக்குமதி செய்தனர் (பக். 304) என்ற செய்தியும், இதில் உள்ளது. சவுராஷ்டிரர்கள், 64 வகை கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நடைமுறையில், 40 கோத்திரங்களே உள்ளன. அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னே குடும்பப் பெயர், பின் தந்தையின் பெயர், ஆக இரண்டையும் குறிப்பிட்டே எழுதுவது வழக்கம். சிலர் மூன்று தலைப்பெழுத்து, சிலர் நான்கு தலைப்பெழுத்தும் (இனிஷியல்)போடுவதுண்டாம் (பக். 154). பிராமணர்களைப் போன்று பட்டு நூல்காரர்கள், ஆவணி அவிட்டத்தின்போது பூணூல் போடக்கூடாதென்று உள்ளூர் பிராமணர்கள் எதிர்க்க, கடந்த, 1704ம் ஆண்டு, ராணி மங்கம்மாளிடம் முறையிட, பட்டு நூல்காரர்கள் தங்கள் வழக்கப்படி பூணூல் போடலாம் என்று தீர்ப்பளித்த தகவல் (பக். 158), இடம் பெற்றுள்ளது. சவுராஷ்டிரர்களின் திருமண முறை, மற்ற இனத்தவரை விட வித்தியாசமானது. சடங்கு முறைகளும் நிரம்ப உண்டு. திருமணத்தின்போது, மாப்பிள்ளையும், பெண்ணும் அணியும் அணிகலன்களை (பக். 165-168) பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். சவுராஷ்டிரர்கள் மிகவும் மென்மையான குணமுள்ளவர்கள், எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவர்கள் என்பதை, கடந்த 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு நிறுவியுள்ளார் (பக். 187). சவுராஷ்டிரர்களின் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், குடும்ப வாழ்க்கை முறைகள், திராவிட இன அடிப்படையை ஒட்டி மாறி உள்ளதென்றும், பட்டு நூல்காரர்கள், நெசவு செய்வோர் என்ற போதிலும் அவர்கள் பிராமண குலத்தவர்களே என்பதையும் இந்நூல் மூலம் நிறுவியுள்ளார் நூலாசிரியர். மிக அழகிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நூல். பிற சமூகத்தார், எப்படி தங்கள் சமூகத்தைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக, இதை பயன்படுத்திக் கொள்ளலாம். -பின்னலூரான். நன்றி: தினமலர், 7/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *