மணப்பேறும் மகப்பேறும்
மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசவுந்தரி, இந்திய மருத்துவ மையம், பக். 1217, விலை 1000ரூ.
குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல ஏன் பிறந்தோம் பெண்ணாய் என சலிப்புத் தட்டும் இந்தக் காலத்தில், பெண்ணாய் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என பாரதியார் எதை உணர்ந்து சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் டாக்டர் ஞானசவுந்தரியின் புத்தகத்தைப் படித்தபின் பாரதியாரின் கூற்று உண்மை என, நினைக்கத் தோன்றுகிறது. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல என வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட, அது எவ்வளவ கடினம் என்பதை, தன் கடிதங்களின் மூலம் விளக்கும் டாக்டர் ஞானசவுந்தரி, பெண் பிறப்பு எத்தகையது, ஆண் பிறப்பு எத்தகையது, பெண் பிறப்பின் மகத்துவம் என்ன என்பதை, தன் இனிய தமிழில் விளக்குவது, புத்தகத்துக்கு மிகப் பெரிய சிறப்பாக அமைந்துள்ளது. நானும் புத்தகம் எழுதுகிறேன் என்று ஏனோதானோ வேலையை அவர் செய்யவில்லை. மாறாக பெண்ணின் உடலில் கரு உருவாவது எங்கே, அதன் வளர்ச்சி, அது பயணிக்கும் இடம், அதன் விருப்பம், தன் ஆசை நாயகனின் விந்து கிடைத்ததும், அது எப்படி மாபெரும் வளர்ச்சி அடைந்து, குழந்தையாக உருவெடுக்கிறது என்பதை மிக அழகாக, படத்துடன் புது மணத் தம்பதியிருக்குப் புரியும்வகையில் விளக்கியுள்ளார். அதோடு அவர் பணி முடியவில்லை. உள் உடற்கூறுகளிலும், வெளி உறுப்புகளிலும், ஒவ்வொரு பருவ நிலையிலும் ஏற்படும் மாற்றம், மன மாற்றம், உபாதைகள், அதனால் ஏற்படும் மன அமைதியின்மை, அதன் அறியாமையால், பெண்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என, புட்டு புட்டு வைத்து, இதுவெனில், இப்படித்தான். இதற்கு இது தான் தீர்வு என, மனதிற்குத் தெளிவு ஏற்படும் விதத்தில் விளக்குகிறார். ஏதெதற்கோ பணம் செலவழிக்கும் நாம், இந்தப் புத்தகத்தை வாங்க செலவு செய்வது மிக மிக நல்லது. வாழ்வியலுக்கு ஒரு கீதோபதேசம் இருப்பதுபோல், மகப்பேறுக்கான கீதோபதேசம் இந்த நூல் என்று சொல்லலாம். -பானுமதி. நன்றி: தினமலர், 7/12/2014.