நிகழ்காலம்
நிகழ்காலம், தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா புக்ஸ், விலை90ரூ.
இடம் பெயரும் மீன் கூட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தை சுனாமி சூறையாடியபோது இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான கடல் பகுதிகளில் மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், அப்பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் என்கிறார் பொன். தனசேகரன். ஒரு சதுர கி.மீ. அளவுக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால் போதும். மீன் பிடித் தொழில் உள்ளிட்ட பல துறைகளின் மூலம் ஆண்டுக்கு ஒன்று முதல் ஆறு லட்சம் டாலர் வரை வருமானம் கிடைக்குமாம். ஆனால் பருவநிலை மாற்றம், முறையற்ற மீன்பிடித் தொழில் போன்ற காரணங்களால் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் உலகத்திலுள்ள மொத்த பவளப் பாறைகளில் பாதியளவுக்கு மேல் வெளுப்பாகிப் பாதிப்படையுமாம். கடந்த நாற்பதாண்டுகளில் இந்தயக் கடல் நீரின் வெப்ப அளவு 0.5 டிகரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அந்தக் கடல் பகுதியை விட்டு மீன்கள் இடம்பெயர்ந்துள்ளனவாம். உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் நோய் பரப்பும் கொசுக்களின் பெருக்கமும் அதிகரிக்கிறது. நவீன வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிற பூச்சிக்கொல்லி மருந்துகளின் எதிர்விளைவுகளால் கொசுக்களைத் தின்று வாழும் தட்டான்பூச்சி போன்ற உயிரினங்களையும் இப்போது காண முடியவில்லை. தவிரவும் குரவை, கெளுத்தி, கெண்டை போன்ற மீனினங்களும் வயல் பகுதியிலிருந்து காணாமல் போயிருக்கின்றன. கிராமப்புறங்களில் அய்யனார் கோயில்கள் போன்ற ஒதுக்குப்புற இடங்களைச் சுற்றி உருவாகியிருந்த கோயில் காடுகள் என்ற அமைப்பின் தனிச்சிறப்பை பற்றியும் அரிய செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றங்கள் இவை பற்றி பயனுள்ள பல செய்திகளை இந்தச் சிறு நூலில் தருகிறார் ஆசிரியர். அடுத்துவரும் தலைமுறைகளின் நலனுக்காகவேனும் இதைப் படிப்பது நல்லது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 30/11/2014.