தீப்பற்றிய பாதங்கள்
தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர். நாகராஜ், தமிழில்-ராமாநுஜம், சென்னை, விலை 350ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-3.html டி.ஆர்.நாகராஜ் எனப்படும் தோட்டபள்ளப்பூர் ராமைய்யா நாகராஜ் என்ற இலக்கியக் கோட்பாட்டாளரை கன்னட எல்லை தாண்டி லேசாக அறியத் தொடங்கியபோது, அவர் தனது 44வது வயதில் இறந்தும் போனார். யு.ஆர்.அனந்த மூர்த்தியை துரோணாச்சாரியாராகவும் தன்னை அவருடைய சீடனாகவும் சொல்லிக்கொண்டவர். ஆதி சூத்திரர் என்றும் இடதுசாரி காந்தியவாதி என்றும் தன்னை அழைத்துக்கொண்டவர். அதற்காக அந்தக் கோட்பாட்டுக்குள் மட்டுமே தன்னை அடக்கிக்கொண்டவர் அல்ல. உனக்குத் தெரியுமா, மற்றொரு அம்பேத்கராக வருவதற்கான ஆளுமை நாகராஜிடம் இருந்தது என்று நான் ஆச்சர்யப்பட்டேன் என்று நாகராஜின் கன்னடக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிருத்வி தத்தா சந்தர ஷோபியிடம் அர்ஜுன் அப்பாதுரை சொனன்தாக ஒரு குறிப்பு இருக்கிறது. இலக்கிய விமர்சகராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகராஜ், அரசியல், வரலாற்று விமர்சகராகப் பரிணாமம் பெற்று, பின்னர் இந்த மூன்றுக்குமான கோட்பாடுகளை உருவாக்குபவராக மாறினார். அதனால்தான் அவரது எழுத்துகள் கன்னடம் தாண்டி பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மண்ட்டோவின் படைப்புகளை அதற்கான அழகியலுடன் தமிழுக்குத் தந்த ராமாநுஜம், இந்தக் கட்டுரைகளை அதனுடைய செறிவான தன்மையுடன் கொடுத்துள்ளார். என்னைப் பொறுத்தமட்டில் தலித் இயக்கம், தீண்டாமைப் பிரச்னையைக் கைகொண்ட காந்திய வழிமுறையை நிராகரிப்பது என்ற தீர்மானமான மனநிலையில் இருந்து உருவானதுதான் என்று சொல்லி அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பீடு செய்து நாகராஜ் எழுதிய எண்ணங்கள்தான் அவரது எழுத்தின் மகுடம். இருவருமே ஒருவருக்கொருவர் மாறுதலை ஏற்படுத்தினார்கள் என்று சொல்லும் இவர், வரலாற்றுக்கு நியாயம் செய்வதென்றால் இந்திய அரசியலில் தீண்டாமை என்ற பிரச்னையை முக்கியமானதாக மாற்றியவர் பாபுதான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று மிகச் சரியாகவே நாகராஜ் சொல்கிறார். அரசாங்க உத்தியோகத்தில் குமாஸ்தாக்களாகச் சேர்வதற்கான எலிப் பந்தயமாக நீதிக்கட்சி இருந்ததாகக் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் நாகராஜ். நீதிக்கட்சியின் தோல்விக்குப் பிறகு அம்பேத்கர் செய்து விமர்சனத்துடன் சேர்த்து வாசிக்கும்போது நாகராஜ் சொல்வதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது. இப்படி அவரது சிந்தனைகள் பல்வேறு சிந்தனை மாற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கின்றன. விசித்திரமான மறதி, சமூகத்தைச் சூழ்ந்து கொண்டுள்ளது. சொல்லப் போனால், ஒரு சமூகம் எவ்வாறு சிந்தித்தது, எதிர்வினையாற்றியது, உணர்ந்தது என்ற வழிகளை மறந்துபோவது பெரும் துயரம்தான் என்றார் டி.ஆர். நாகராஜ். அந்தத் துயரங்களை நினைவுபடுத்துவதுதான் நாகராஜின் எழுத்துகள். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21/12/2014.