தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2, கே. ஏ. ராமசாமி, சாதுராம் பதிப்பகம், முதல் தொகுதி விலை 300ரூ, இரண்டாம் தொகுதி விலை 230ரூ.

ராமபிரானுக்க அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை. ஒப்புமை கூற இயலாதவை. நவீன அரசியலுக்கும் வழிகாட்டும் வகையில் நுணுக்கங்கள் கொண்டவை. இந்த நாட்டின் பாரம்பரியத்தில் அரசு, ஆளுமை, நிர்வாகம், நிதி என்று எல்லா துறைகளுக்கும் முன்னோடி கருத்துக்கள், இலக்கியத்தில் உள்ளன. தமிழில் தூது, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்றவை, தமிழை உயிரோட்டத்துடன் வளர்க்க உதவியவை. விழுமிய கருத்துக்கள் கொண்டவை. இவற்றில் தமிழ்விடு தூது பலரும் அறிந்தது. அன்னம், கிளி, மான் போன்றவை மட்டும் அல்ல, புகையிலையை தூதாக அனுப்பியது உண்டு. இவை சிறு பிரபந்தங்கள் என்றாலும் தமிழுக்கு பொலிவைத் தந்தன. தூது என்ற பொதுத் தலைப்பில், தமிழ் ஆர்வம் கொண்ட ஆசிரியர் முயற்சி சிறந்தது. கம்சன் பிறப்பில் ரகசியம் இருப்பதாக செவ்வைசூடார் பாகவதத்தில் முனிவர் அக்ரூரர் கூறம் தூது தகவல் இதில் ஒன்று. வழிபட்டோருக்கு நலமெல்லாம் நல்கும் முருகன் சார்பில் கச்சியப்ப சிவாச்சாரியார் காட்டும வீரவாகுத்தேவர் தூது பகுதியில், சில நயமான பகுதிகள் உள்ளன. விறலிவிடு தூது என்று பல தலைப்புகளில் நூல்கள் இருந்தாலும், அவற்றை வகைப்படுத்தும் ஆசிரியர் சிற்றம்பலக் கவிராயரின் மூவரையான் விறலிவிடு தூது பகுதிகளை குறிப்பிட்டிருக்கிறார். வாசுதேவன் என்பவர் இந்திராணியின் ஆசை வலையில் விழுந்து பணத்தை இழந்தார். அதை அவர் கூறும் பாணி இதோ, மை அமரும் கண்ணி மருள மாயத்தால் என்னைப் பிறர் அய்யம் உறக் கோவணன் ஆக்கிவிட்டாள் ரசம் மிகுந்த காதல் வரிகள் கொண்ட தூது இலக்கியம் இன்று தமிழில் புழங்கினால், காதலின் பொருள் அர்த்தமுள்ளதாகிவிடும். மதுரை சொக்கநாதர் இயற்றிய தமிழ்விடு தூது என்னும் பிரபந்தம், இவற்றில் மகுடம் போன்றது. சிவபெருமான் திருச்செவியில் உரைக்க வல்லமை தமிழுக்கு மட்டும் உண்டு என்பதை குறிப்பிட்டு, திருமதுரை தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால், தேனே நம் பாக்கியத்தின் செய்தியே என்பது போன்ற கண்ணிகள் படிக்க சுவையூட்டுவன. இவை அனைத்தையும் தொகுத்த ஆசிரியர் பெருமுயற்சி தமிழை மக்கள் உய்த்துணர உதவிடும் நன்முயற்சி ஆகும். -எம்.ஆர்.ஆர். நன்றி: தினமலர், 21/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *