கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ.

ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் ஆவணமாகக் காட்டுகிறது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, 30 மாதங்கள் சிறையில் இருந்தும் உள்ளம் தளராமல், மீண்டும் வந்து திரைப்படங்களில் நடித்து சிரிக்க வைத்தார். அவர் நடித்த 100 படங்களுமே அவர் நடத்தும் பாடங்கள்தான். -முனைவர் மா.கி. ரமணன்.  

—-

தனிப்பாட்டில் திரட்டில் இன்சுவைக் காட்சிகள், சரளா ராசகோபாலன், ஒளிப் பதிப்பகம், பக். 176, விலை 110ரூ.

கவிதை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. கவிஞர்கள், தங்கள் அனுபவங்களைத் தனிப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தனிப் பாடலுக்கும், ஒரு கதைப் பின்னணியும், வரலாறும் இந்த நூலில் விரிவாக, சுவையாகத் தரப்பட்டுள்ளது. நக்கீரரின் குறுந்தொகைப் பாடலில், கூந்தலுக்கு, இயற்கை வாசம் உண்டா என்ற பாடலுடன் நூல் துவங்குகிறது. இரட்டைப் புலவர்கள், துறைமங்கலம் சிவப்பிரகாசர், அதிவீரராம பாண்டியர், படிக்காசுத் தம்பிரான், புலப்பட்டடைச் சொக்கநாதர், நமச்சிவாயப் புலவர், சுப்ரதீபக் கவிராயர், ராமச்சந்திர கவிராயர், ராம கவிராயர் என்ற பல புலவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை, இந்த நூலில் படித்து மகிழலாம். ஒவ்வொரு தனிப்பாடலும் ஒவ்வொரு கதை தேடித் தருகிறது. சில இடங்களில் பாடலே இல்லாமல், வெறும் விளக்கமே உள்ளது. ஒரே பாடலை இரு தலைப்புகளில் 97, 100 இருவேறு விளக்கமாகத் தந்திருப்பதும், அடுத்த பதிப்பில் திருத்தப்பட வேண்டும். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 14/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *