ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ.
திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை எழுதப்பட்டு, ஸ்ரீரமண பக்த சமாஜம் மூலம் வெளியிடப்பட்டது. திருப்போரூர் சிதம்பர சிவாமிகள் முதலில் உரை எழுதியுள்ளார். பொதுவில் உபதேசம், சத்திநி பாதத்துத் தமர் ஒழிவு, யோகக் கழற்றி, கிரியைக் கழற்றி, சரியைக் கழற்றி, விரத்தி கழற்றி, துறவு, அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை, நிலை இயல்பு என, பத்து அதிகாரங்கள், 253 பாடல்களாக விரிந்துள்ள சைவ சித்தாந்த நூல் இது. வள்ளல் பெருமான் போன்ற பெரும் ஞானிகளுக்கெல்லாம், சித்தாந்த வேதாந்த விளக்கங்களை, ஆன்மத் தெளிவை, பரம ஞான ரகசியத்தை இந்நூல் வாயிலாகவும் உணர்ந்து, பக்குவநிலை பெற்றிருக்கலாம் என்று யூகிக்க வாய்ப்புள்ளது. எனினும் இத்தகைய அடிப்படை சைவ சித்தாந்த நூலைப் படிக்க வேண்டிய ஞானப் பொக்கிஷம். -பின்னலூரான். நன்றி: தினமலர், 14/7/13.
—-
வளரும் அறிவியல் களஞ்சியம், மயில்சாமி அண்ணாதுரை, இ.கே.டி.சிவக்குமார், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 125ரூ.
வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகளில் 40 கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, நூலாகத் தந்திருக்கின்றனர். பல அறிவியல் கட்டுரைகளுடன் உணவு முறைகள், மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, ஒழுக்கமான வாழ்வே உன்னதமான வாழ்வு போன்ற பல மருத்துவக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. -சிவா நன்றி: தினமலர், 21/7/13.