தெலுங்கு மொழிப் பெருங்காப்பியம்
தெலுங்கு மொழிப் பெருங்காப்பியம், தமிழ் மொழிபெயர்ப்பு நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியார் பாடலுக்கிணங்க தமிழ் தாயின் சகோதரியான தெலுங்கு அன்னையின் மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் இயற்றிய ஆமுக்த மால்யத என்ற காப்பியத்தை சூடிக்கொத்தவள் என்று பைந்தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய தலைவரான முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் ஜெகத்ரட்சகன். திருமாலின் துணைவியான பூதேவி, தன் கணவரை பண்ணிசை பாடல்கள் இயற்றி பாடித்துதிக்க தமிழ்மொழிதான் சிறந்த மொழி என்ற உணர்வுடன் பூவுலகில் மானுட பெண்ணாக அவதரிக்க ஆண்டாளாக தென் தமிழ்நாட்டில் பிறந்த இனிய வரலாறு உள்பட வைணவத்தின் அத்தனை சிறப்புகளையும் எளிய இனிய தமிழில் வடித்தெடித்து கொடுத்து இருக்கிறார். இந்த காப்பியத்தை திருமாலின் அருள் பெற படிக்கவா? அல்லது தமிழ் மொழி என்ற தேனை சுவைக்க படிக்கவா? என்று தெரியாத அளவில் பல முத்துக்கள் கொண்ட அற்புத நூலாக இது விளங்குகிறது. வைணவத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் தினமும் படித்து அருள்பெற வேண்டிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அந்தாதி, ரா. ஞானசேகரன், ஸ்ரீலட்சுமி நாராயணி பதிப்பகம், விலை 50ரூ. வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் குடி கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரர் பற்றி எழுதப்பட்ட 100 அந்தாதி பாடல்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.