தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை)
தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை), கோக்கலை ஜே. ராஜன், மகராணி, சென்னை 101, பக். 496, விலை 250ரூ.
தேரையர் என்பவர் தருமசௌமியர் என்பவருடைய மாணக்கர் என்றும் அகத்தியருடைய மாணக்கர் என்றும் கூறுவர். ஆனால் இவருடைய இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இவர் காலத்தில் நீங்காத தலைவலி கொண்ட ஓர் அரசனின் தலைவலியைப் போக்க, அவருடைய கபாலத்தைத் திறந்து பார்த்தபோது அங்கு ஒரு தேரை இருந்ததாம். உடனே ஒரு பாத்திரத்தில் நீரை வைத்ததும், தேரை அந்த நீரில் குதித்து நீங்கியதாம். பிறகு மூலிகையின் உதவியுடன் அரசனின் கபாலத்தை மூட, மயக்கம் நீங்கி எழுந்த அரசன், தலைவலி முற்றிலும் நீங்கிவிட்டதைக் கண்டு இவருக்குத் தேரையர் என்றே பெயர் சூட்டினானாம். அன்று முதல் இவர் தேரையர் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார். நீர்க்குறி, நெய்க்குறி, தைல வருக்கச் சருக்கம், வைத்தியாகம வெண்பா, மணிவெண்பா, மருத்துவப் பாரதம் ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார் என்றும் கூறுவர். இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய சர்ச்சை இன்றுவரை இருந்துவருகிறது. இந்நூல் 758 வெண்பாக்கள் கொண்ட மிகச் சிறந்த சித்த வைத்திய நூல். 30 வயது கடந்த பெண்ணும் 11வயது பெண்போல் விளங்கவோர் வாழ்வார் என்பதற்கான மூலிகை மருத்துவத்தை குமரிகற்பம் என்ற தலைப்பிலான (பக். 136)ஒரு வெண்பா மூலம் விளக்கியிருப்பது அரிய புதிய தகவல். மேலும் அகத்தியர் இயற்றிய செந்தூரம், முந்நூறு என்ற நூலும் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. நன்றி: தினமணி, 24/10/11.
—-
விஞ்ஞான காலத்திலும் சகுன பலன்கள், எம்.ஏ. ஜெய்ஷங்கர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 80ரூ.
விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் அசைவுகளுக்கும், அவை எழுப்பும் குரல்களுக்கும் சகுன பலன்கள் உண்டு. வராஹ மிஹிரர் இயற்றிய நூலில் இருந்து, தமிழ் உரை எழுதியுள்ளார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். நன்றி: தினத்தந்தி, 20/3/13.
—-
நடந்தது நடந்தபடி, (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்து வந்த பாதை), டாக்டர் ஏ.எம்.சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.
இந்நூலின் ஆசிரியர் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலராக இருந்தவர். இவர் எந்தெந்த கோட்டங்களில் எந்தெந்த துறைகளில் எல்லாம் பணிபுரிந்தார். அப்போது நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தான் சந்தித்த பிரச்னைகள், அதை தீர்த்த விதத்தையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பணியில் உள்ளோர் பின்பற்றும் வகையில் இந்நூல் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/3/13.