தொட்டிக் கட்டி வீடு

தொட்டிக் கட்டி வீடு, இரா. வடிவேலன், கௌதம் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 95ரூ.

கொங்குநாடு என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்குப் பகுதியான கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராம மக்களின் கலாசாரம், பண்பாடு, உறவுமுறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை கதையின் களமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கவுண்டர் இன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இந்த நாவல். கொங்கு வட்டார வழக்கில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் வடிவமைப்பை வைத்தே தொட்டிக் கட்டு வீடு என இந்த நாவலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. கதையில் வரும் மயிலாத்தாள் கொங்கு நாட்டு கிராமங்களின் வேளாண் பெருங்குடிகளான கவுண்டர்கள் வீட்டுப் பெண்களின் குணநலன்களின் மொத்த உருவமாகத் திகழ்கிறாள். இதேபோல இந்நாவலில் உலா வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக உயிப்போடு சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலம், நீரோடை, ஊர்ப்பஞ்சாயத்து கூடும் இடம், கோயில், விளைபொருள்களைச் சேமித்து வைக்கும் இடம் என அனைத்தையும் நம் கண்முன் கொண்டு வந்திருப்பது சிறப்பு. மாறிக் கொண்டிருக்கும் கொங்கு நாட்டு மக்களின் கலாசாரத்துக்கு இந்த நாவல் புத்துயிர் ஊட்டுகிறது என்று சொன்னால், அது மிகையல்ல. கொங்கு நாட்டு கிராம மக்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும். நன்றி: தினமணி, 29/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *