தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்
தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேரா. குருசண்முகநாதன், சங்கீதா, பக். 202, விலை 120ரூ. 8903678644.
தொல்காப்பியம் பற்றிப் பலரும் அறிவர. தமிழின் தொன்மையான இலக்கண நூல் அது. நாட்டுப்புறவியல் என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால் இது, நாட்டுப்புலவியல், புதுமையான சொல்லாக்கம். நாட்டுப்புறவியல் என்பது குறையுடைய சொல்லாட்சி என்றும், தொல்காப்பிய வழியில் ஆராய்ந்து புதிதாக இந்தப் புலவியல் ஆக்கப்பட்டது என்றும் ஆசிரியர் எழுதியுள்ளார். புலம் என்னும் சொல், இடத்தை நிலத்தை, ஊரைக் குறிக்கும் சொல். ஆதலின் புறம் என்பதனிலும் புலம் என்பது சரியாகப்படுகிறது. நாட்டார் பாடல் என்னும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. இது ஒரு சாதியினரைக் குறிக்கும் சொல்லாதலும் உண்டு. நாடு என்பது தேசத்தைக் குறிப்பதாயின், பல காலமாகச் சிற்றூர் (கிராமம்) என்பதைக் குறிக்குமாறு நாட்டுப்புறம் என்ற சொல்லாக்கம் பயன்பாட்டில் உள்ளது. இந்நூலின்கண், தாலாட்டுப் பாடல்கள், காதல் பாடல்கள், தொழில் பாடல்கள், விழாப் பாடல்கள், சமுதாயப் பாடல்கள், கோமாளிப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என்ற பல்வேறு கிராமியப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆப்பாடல்கள் பற்றி நீண்ட ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் துறையில் முன்னரே பல நூல்கள் வந்துள்ளன என்பது பற்றியும், அவற்றைத் தொகுத்தவர்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தில் புலப்பாடல் குறிக்கப்படுகிறது. ஆதலில் நாட்டுப்புலப்பாடல் என்பதே சரி என, ஆசிரியர் நிறுவுகிறார். படித்துப் பயனடைய வேண்டிய நூல். -கவிக்கோ ஞானச்செல்வன்.
—-
தமிழ்நாட்டு திருவிளக்குகள், அ.ராகவன், இனியமுது பதிப்பகம்.
விளக்கு என்பது தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய இன்றியமையாத பொருளாக உள்ளது. தமிழர்களின் இல்லத்தில் ஆதிகாலத்தில் இருந்து தற்போதுவரை ஒரு மதிப்பிற்குரிய மங்கல பொருளாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் மின்விளக்குகள் தோன்றியதும், ஆவி விளக்குகளும் எண்ணெய் விளக்குகளும் மறைந்துவிட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டுமே அவை மறைந்துவிடாது ஒளி வீசி நிற்கின்றன. ஆசிரியர் ராகவன் அவரது இல்லத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விளக்குகளையும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவில்களிலும் வீடுகளிலும் தொல்பொருள் காட்சி சாலைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான விளக்குகளை ஆராய்ந்து நூலாக வடித்துள்ளார். குத்துவிளக்கில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நுணுக்கமாக பதிவு செய்தவிதம், நம் கவனத்தை ஈர்க்கிறது. மொத்தம் 200 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 8/9/2013.