தோட்ட காட்டீ
தோட்ட காட்டீ, இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர், விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-862-3.html தேசம் சுமந்த மீட்பனுக்கு தலை சாய்க்க காணியில்லை இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் குறித்து, இரா. வினோத் எழுதிய தோட்ட காட்டீ என்ற கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். பெங்களூர் அறம் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். மலையகத் தமிழர்களின் வாழ்வைப் பற்றிய தகவல்கள், முழுமையாக இத்தொகுப்பில் உள்ளன. கேள்விப்பட்டதை, படித்ததைக் கொண்டு கவிதை எழுதமால், நேரடியாக இருமுறை, இலங்கை சென்று மலையகத் தமிழர்களோடு தங்கி, அவர்களின் சுக, துக்கங்களை அறிந்து, கவிஞர் இந்த தொகுப்பை எழுதியுள்ளார். தோட்ட காட்டீ என்ற சொல், தோட்டத் தொழிலாளர்களை, மிகவும் கிண்டலாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாடல், அதையே கவிதைத் தொகுப்புக்கு பெயரிட்டுள்ளார். கவிதைத் தொகுப்பில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. இதில், பரதேசி படலம் என்ற தலைப்பில் தேயிலை கூடையில் தேசம் சுமந்த மீட்பனுக்கு தலை சாய்க்க காணியில்லை என குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன், இலங்கை சென்ற தமிழர்கள், அந்த நாட்டில் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது என்கிறார் கவிஞர். அதேபோல கோப்பி செய்யும் முறை என்ற தலைப்பில் உள்ள கவிதையில், கோப்பையைப் பிழிந்தால் வழியும் தொழிலாளியின் ரத்தம் என சொல்கிறார். கோப்பி என்பது காப்பியை குறிக்கும். காப்பித் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையை இந்த கவிதை வெளிப்படுத்துகிறது. இலங்கையில் கணிசமாக உள்ள மலையகத் தமிழர்களின் நிலை குறித்து போதிய பதிவுகள் இல்லை. அந்தக் குறையைப் போக்கும்வகையில் கவிஞர் வினோத்தின் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தமிழகத் தமிழர்கள், இலங்கையில் காபி, டீ, தோட்டங்களை அமைக்க, ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் தமிழகத்தின் பூர்வகுடிகள் என்றாலும், இங்கும் குடியுரிமை இல்லாமல், வளப்படுத்திய இலங்கையிலும் தனித்து விடப்பட்டு உள்ளனர். ஈழத் தமிழர்களின் துயரங்களைப் பேசும்போது, மலையகத் தமிழர்களின் துயரங்கள் குறித்தும் நாம் அக்கறைப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக உள்ள கோரிக்கை. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, தோட்ட காட்டீ கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. -தாஸ் இறையடியான், பெங்களூரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். நன்றி: தினமலர், 14/9/2014.