எந்த வானமும் உயரமில்லை
எந்த வானமும் உயரமில்லை, ரமணன், ரீம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லி, விலை 25ரூ.
சொந்தச் சிறகுகளால் தன்னடக்கம், எளிமை, பரிவு ஆகியவை ஆன்மிகத்துக்கான அடையாளங்கள், அல்லல்களுக்கு இடையே ஆள்தொலைந்து போகாமல் இருப்பதே வாழ்வதாகும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ரமணன். புல்லினும் அற்பமானது கவலை என்கிற அவர், கவலையைச் சரவெடி போல உருவகிக்கிறார். ஒரே ஒரு திரி, நூறு வெடிகள் என விளக்கவும் செய்கிறார். ஒருபோதும் நம்மை நாமே கைவிடலாகாது என்று உற்சாகமும் ஊட்டுகிறார் அவர். சாதாரண மனிதர்களை ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்யும் முயற்சியாக இந்த நூல் இருக்கிறது. எங்கே மதம் முடிகிறதோ அங்கே ஆன்மிகம் தொடங்குகிறது என்கிறார் நூலாசிரியர். சொந்தச் சிறகுகளால் பறக்கும்போது வானம் உயரமில்லை என்பது இந்த நூலின் மையம். நம்மையும் வாழ்வையும் சரியாக காணக்கூடிய பார்வையே உற்ற தோழன். அதுவே ஞானம். கடவுளின் நிழல். அதிலொரு துளியே இந்த நூல் என்கிறார் நூலாசிரியர் அருணன். ஆங்கிலத்தில் தான் எழுதிய நூலைத் தானே தமிழாக்கி நமக்கு அளித்துள்ளார் ரமணன். இது வாழ்வனுபவ வழிகாட்டி மட்டுமல்ல, சுயமுன்னேற்ற அம்சங்களைக் கொண்ட ஆன்மிக நூல். சகமனிதர்களின் நலத்தில் செயல்பூர்வமான அக்கறை, தன்னலம் கருதாத பண்பாடு இவையே வாழ்தல் என்பதாகும் என்று வரையறை செய்கிறது இந்த நூல். – நீதிராஜன். நன்றி: தி இந்து, 20/9/2014.
—-
ஆல்பெர் காம்பு நூற்றாண்டு நாயகன் மொழிபெயர்ப்பும், சா. தேவதாஸ், கருத்துப்பட்டறை, மதுரை, விலை 120ரூ.
மதிப்புமிக்க ஆவணம் அந்நியன் நாவல் வழியாகத் தமிழ் வாசகர்களைப் பாதித்த பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ஒட்டி வெளியாகியுள்ள நூல் இது. ஆல்பெர் காம்யுவின் நோபல் பரிசு ஏற்புரை, சிறுகதை, பயணக்குறிப்புகள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. மரணதண்டனைக்கு எதிரான காம்யுவின் கட்டுரை தற்போது அவசியமானது. ஆல்பர் காம்யு குறித்து ஓரான் பாமுக் எழுதிய முக்கியமான கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை சா. தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார். படைப்பாளியாக அறமுகமான ஆல்பெர் காம்யுவின் அரசியல் சார்பு, முரண்பாடுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகம் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. ஆல்பெர் காம்யுவை அதிகமாக அறிந்துகொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும். -வினு. நன்றி: தி இந்து, 20/9/2014.