உடையும் இந்தியா

உடையும் இந்தியா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 500ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html அரவிந்தன் நீலகண்டன் எழுதிய உடையும் இந்தியா நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. மதம், அது சார்ந்த விளைவுகளை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. மதம் ஒருவரை சார்ந்த விஷயம். அதை அவர் தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தனக்குள் இருக்கும் மதத்தை, ஒருவன் உரக்கச் சொல்கிறான் என்றால், அதைப் பொருட்படுத்தாமல் போகும் பெருந்தன்மை, மற்றவர்களுக்கு வேண்டும் என்பதை நூல் அறிவுறுத்துகிறது. தனிமனிதனுக்குள் இருக்கும் மதத்தைக் கொண்டு, அறியாமை, ஏழ்மையில் வாழ்வோரை மதம் மாற்றுவது, மத்தைக் கொண்டு மூளைச் சலவை செய்து, பயங்கரவாதத்தை உருவாக்குவது போன்றவற்றை நூல், சுட்டிக்காட்டுகிறது. குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்வது எவ்வளவு படுபாதகச் செயல். அதனால் ஏற்படும் எதிர்வினைகள் என்ன, என்பதையெல்லாம் நூலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் நிலவும் கல்லாமையும், வறுமையும் போக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், அவற்றை சமூக அக்கறையோடு அணுக வேண்டும். ஆனால் மதத்தைக் கொண்டு, இப்பிரச்னைகளை அணுகுவது சமூகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என, நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். குறிப்பாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவதால், சமூகத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஏற்படும் தடைகள் என்ன என்பதை, இந்நூல் மூலம் அறிய முடிகிறது. ஒரு உயிரை கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. உயிரை பாதுகாக்கவும், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் கடமையும்தான், மற்றவர்களுக்கு உண்டு. இதை சமூக அக்கறை உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசியல்வாதியும், உடையும் இந்தியா நூலை அவசியம் படிக்க வேண்டும். மதத்தால், நாட்டுக்கு ஏற்படும் தீங்கை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மதம் தனிப்பட்ட நபரின் உணர்வு அல்லது கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர, பிறர் மீது திணிக்கவோ, அதன் மூலம் ஆதாயம் பெறவோ கூடாது என்பதை, உடையும் இந்தியா நூல் உணர்த்துகிறது. -தமிழிசை சவுந்திரராஜன்,பா.ஜ.க. தமிழக தலைவர். நன்றி: தினமலர், 14/9/2014.

Leave a Reply

Your email address will not be published.