நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ.

இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். ஆனால் நிலப்பிரபுத்துவம் தன்னுடைய குணாம்சத்தை இப்படியே தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற பயத்தை ஏற்படுத்தியதுதான் நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படையான பயன்பாடு. அந்த எழுச்சிமிக்க 1967ம் ஆண்டு முதல் பல்வேறு அடக்குமுறைகளின் காரணமாக பலப்பிரயோகம் செய்யப்பட்ட 1971 காலகட்டம் வரையில் வரலாற்றுரீதியாகவும் தத்துவார்த்த முறையிலும் நடந்த நிகழ்வுகளை சுனிதிகுமார் கோஷ் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். இதுவரை நக்சல்பாரிகள் பற்றி எத்தனையோ புத்தகங்கள் ஆதரித்தும் எதிர்த்தும் பாராட்டியும் பழிசொல்லியும் வந்துள்ளன. இவை அனைத்திலும் இந்தப் புத்தகம் மாறுபட்டது. ஏனென்றால் அந்த எழுச்சிக்கு அடிநாதமாக இருந்த தோழர்கள் சாரு மஜும்தார், சுஷிடல்ராய் சௌத்ரி, சிவகுமார் மிஸ்ரா, சரோஜ் தத்தா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய சுனிதிகுமார் கோஷாலால் எழுதப்பட்டது இந்தப் புத்தகம் என்பதுதான் இதற்கு கிடைத்துள்ள முக்கியத்துவம். லிபரேஷன் பத்திரிகையின் ஆசிரியராகவும் ஏ.ஐ.சி.சி.ஆர். உறுப்பினராகவும் இருந்தவர் சுனிதிகுமார் கோஷ். நக்சல்பாரி விரைவில் தோல்வியைத் தழுவியது என்பது உண்மைதான். ஆனால் அது அந்தக் காலகட்டத்துக்கு பொருத்தமான போராட்டம். அது நடந்தே தீரும் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. விவசாயிகள் மற்றும் பிற ஒடுக்கப்படும் வர்க்கங்கள் மத்தியில் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்துக்கு அதன் ஆன்மாவை மீட்டுத் தந்தது. இந்தியாவின் விவசாய அமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான இந்திய ஜனநாயகப் புரட்சியின் தொடக்கத்தையும் அதன் நிகழ்ச்சிப் போக்கின் ஊடாக ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் அனைத்துச் சுவடுகளையும் துடைத்தெறிகின்ற தேசியப் புரட்சியின் முழுமையாகக் கலையும் அது குறித்தது என்று சுனிதிகுமார் சொல்வது முழு உண்மை. தத்துவங்களை இறக்குமதி செய்யாமல் மண்ணுக்கேற்ற மார்க்சீயத்தை வடிவமைப்பதும், அதீத சாகசவாதங்களில் சிக்கிக்கொள்ளாமல் அடித்தட்டு மக்களை ஒன்றுசேர்ப்பதும், குட்டி முதலாளித்துவமும் குறுங்குழுவாதமும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்வதுமே நக்சல்பாரி காட்டும் பாடம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 7/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *