நம்ப முடியாத உண்மைகள்
நம்ப முடியாத உண்மைகள், எஸ்.பி. செந்தில், தந்தி பதிப்பகம், பக். 288, விலை 150ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788193129524.html 2003-ம் ஆண்டு மே மாதம் தினத்தந்தியில் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் புதிய பகுதி தொடங்கப்பட்டது. இதில் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் இடம் பெற்றன. இந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. வாசகர்கள் அளித்த வவேற்பு காரணமாக 12 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் தினம் ஒரு தகவல் வெளியாகிவருகிறது. இதுவரை வெளியான தகவல்கள் செய்திகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நம்ப முடியாத உண்மைகள் என்ற தலைப்பில் தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. இதில் உலகம், முதல் முதலாகப் பிரமாண்டம், நவீனம், வினோதம், அண்டம் வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் தகவல் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகில் அதிக நாள் வாழும் மக்கள், மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை, ஆயிரம் மைல் பிரமாண்ட குகை போன்ற வினோத செய்திகளும், மனிதனுக்கு உதவும் டால்பின்கள், ஒரே இடத்தில் தண்ணீரும் வெந்நீரும், மழை வர மலைப்பாம்புக்கு திருமணம் போன்ற வினோத செய்திகளும், 99 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்ட நாடு, கொடூரமான குவாண்டானாமோ சிறைச்சாலை, லிப்ட் கேட்டே உலகைச் சுற்றியவர், மண்ணைச் சாப்பிடும் மக்கள், ஒரே ஆண்டில் ரூ.350 கோடி சம்பாதித்த நாவல், பசிபிக் பெருங்கடலைத் தனியாகக் கடந்த பெண், அடல்ஸ் ஒன்லி நகரம் போன்ற உலகச் செய்திகளும், இரண்டாயிரம் துணை நடிகர்கள் நடித்த தமிழ்ப் படம், படிக்காத 3 லட்சம் ஓலைச் சுவடிகள், இசைத் தட்டுக்குப் பாடாத பாகவதர் போன்ற தமிழகச் செய்திகள் மற்றும் கலர் படங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்வதுண்டு. இந்த நூலைப் படித்தால் அத்தனையும் நம்ப முடியாத உண்மைகள். இந்த தகவல்களை பத்திரிகையாளர் எஸ்.பி. செந்தில்குமார் திரட்டி சுவைபட தந்துள்ளார். இந்த நூல் அனைத்துத் தரப்பினரையும் கவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.