நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்
நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும், சந்திரமவுலி, அல்லயன்ஸ் கம்பெனி, பக். 168, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html வடக்கு குஜராத்திலும் வாடுநகர் என்ற சிற்றூரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்த மகன்லால் ரான் சோத்தாஸ் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நரேந்திர தாமோ தர்தாஸ் என்னும் நரேந்திர மோடி. இளமைக் கல்வி முடிந்து கல்லூரியில் சேர்ந்து, ஒரு ஆண்டிற்குள் உண்மையான ஞான ஆனந்தத்தை தேடிப் புறப்பட்டவர். 1972 வாக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் ஆனார். பின், 2008ம் ஆண்டில் கடுமையான எதிர்மறைப் பிரசாரங்களையும் மீறி அமோக வெற்றி பெற்று, குஜராத் முதல்வராக மூன்றாவது முறை பதவி ஏற்றது வரை, அவரது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். குஜராத்தில் நரேந்திர மோடியின் பல திட்டங்கள் எப்படிச் செயலாக்கப்பட்டுப் பலனை நல்குகின்றன என்பதை, நேரில் கண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் மொத்தத்தில் இந்தத் தேர்தல் நேரத்தில், மோடியின் புகழ் பாடும் ஒரு நூல். நன்றி: தினமலர், 30/3/2014.
—-
கிழக்கும் மேற்கும், இளம்பிறை மணிமாறன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 150ரூ.
கவிசக்ரவர்த்தி கம்பன், ஆங்கில இலக்கிய உலகின் முடிசூடாமன்னன் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது படைப்பாற்றல், பாத்திரத்திறன், கற்பனைவளம், கவிதை நடை என, பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ள இந்நூலில், கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி, மனித மகோதரத்துவம் என்ற தத்துவம் பொதுவாக உள்ளதென நிலைநாட்டியுள்ளார் நூலாசிரியர். அண்ணலும் நோக்கினான் என்ற கம்பனின் காட்சியை ரோமியோ ஜுலியட் காட்சியுடனும், வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ என்ற இலக்குவன் கூற்றை, கிங் லியர் நாடக மாந்தருடனும், இறப்பு எனும் மெய்மையை வசிட்டன் இராமனிடம் கூறியதுபோல், உலக நிலையாமையை லேடி மேக்பத் இறந்தபோது பேசுவதும். பெண்ணாசையால் வீழ்ந்த ராவணனுக்கும், அந்தோணிக்கும் ஒப்புமைகாட்டியும் இப்படியே ஆய்வு நீள்கிறது. கம்பனின் வைர வரிகளும், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரிகளும் இதில் பெரும்பாலும் உள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய புலமை இவ்வெளிப்பாடகள் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழில் கம்பன் படைத்த ஒரு காவியம், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் படைத்த அத்தனை காப்பியங்களையும் உள்ளடக்கியுள்ளது என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், அறிய விழைவோர், அவசியம் படிக்க வேண்டிய நல்ல ஒப்பீட்டாய்வு நூல். -பின்னலூரான். நன்றி: தினமலர், 30/3/2014.