நலம் 360
நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ.
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணர்வுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும் மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தப்பரிப்பு மையங்களின் பெருக்கம், மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இது மாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மறந்ததுதான். சுத்தம் என்ற நல்ல பழக்கத்தை பயமாக ஆழ்மனதுக்குள் விதைத்து அதை வணிக மயமாக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் யுக்தி, மரபணு பயிர்களால் என்றுமே மனித இனத்திற்குக் கேடுதான். இதற்கு மாற்று இயற்கை விவசாயம் மட்டுமே என்பதை அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறி, நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை நம்முள் விதைத்திருக்கிறார் மருத்துவர் கு. சிவராமன். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.
—-
விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். நாடு விடுதலை பெற்ற பின் 1947 முதல் 1977 முடிய உள்ள 30 ஆண்டுக்காலத்தில் மத்திய அரசும், மாநில அரசும், சென்னை, மதுரை, அண்ணாமலை பல்கலைக்கழகங்களும், மத்திய – மாநில அரசுகளால் அமைக்கப் பெற்றுள்ள நிறுவனங்களும் தமிழ் வளரவும், தமிழர் புகழ் பெருகவும் ஆற்றி வந்துள்ள பணிகள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய – மானிலல அரசுகளைப் பயன்படுத்தி தேசியவாதிகள் தமிழ் மொழித் தொண்டில் ஈடுபட்ட வரலாறும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழை வளர்க்கவும், தமிழனத்தின் புகழைப் பெருக்கவும் இயன்றவரை பாடுபட்டதை இந்நூல் வழி அறியலாம். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.