நான் மருத்துவம் மற்றவை

நான் மருத்துவம் மற்றவை, டாக்டர் வி.வி. வரதராசனின் தன்வரலாறு, ராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 240, விலை 150ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-7.html சிக்கல்களில் மாட்டினால் எப்படி மீள வேண்டும்? எறும்பாகப் பிறந்தபோது, அடி சறுக்கவில்லை. யானையாக வளர்ந்தபோது அடி சறுக்கியது. ஆனால் வாழ்க்கை அனுபவங்கள், சறுக்கலில் எக்கச்சக்கமாய் விழுந்து விடாமல் காப்பாற்றின என்பதை, நேரடியாக உணர்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வெற்றியுடன் சாதித்து உள்ளார் டாக்டர் வரதராஜன். இதை, எளிமையாக, சுவையாக எடுத்துரைத்ததில் ராணி மைந்தனின் பணி பாராட்டுக்குரியது. தான் பெற்றெடுக்கும் குழந்தை ஒவ்வொன்றும், பிறக்க பிறக்க இறக்கும் துக்கத்தின் வலியைத் தாங்கி வாழ்ந்த தாயின், முகத்தைப் பார்த்துப் பார்த்து, வெறிகொண்டேறி, மருத்துவராய் பரிமளித்த விதத்தை, மிக அழகாகச் சொல்லி இருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல ஆறு குழந்தைகள். அத்தனையும் மண்ணாகிப் போனபோது, இனி நாம் குழந்தைகள் நல மருத்துவராவதை விட, வேறு என்ன வேண்டிக் கிடக்கு என்ற சூளுரையுடன் இன்று வரை, குழந்தை நல மருத்துவராய் பரிமளிக்கும் பெருமையை சொல்லும்போதே, தனக்கும், தன் உடலைப் பேணாது போகக்கூடிய தருணங்கள் வந்தன என்பதையும் சொல்கிறார். எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டினால், அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பதை, என்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என, தன் அனுபவங்களைப் புட்டு புட்டு வைக்கிறார். பெரிய எழுத்தாளர் ஒருவர், தன் வங்கிக் கணக்கை இயக்கத் தெரியாமல் தவித்ததுபோல, பிரபஞ்சப் பேரழகி ஒருவர், தனக்கு ஏற்ற உடை என்ன என்பது தெரியாமல் தவித்ததுபோல, தானும், ஒரு மருத்துவராய் இருந்தபோதும், தன் வரவு செலவு கணக்குகளை சரியாகப் பராமரிக்கத் தெரியாமல் சிக்கிக் கொண்டதை, வெளிப்படையாக விளக்குகிறார் டாக்டர் வரதராஜன். தன் ஆசான் சுகபோதானந்தாவிடம் கற்ற பாடங்களைச் சொல்லி, தெளிவுபடுத்தியுள்ள விதம் அருமை. நோய் பற்றி எதுவுமே அறியாத நோயாளியிடம், நோய் பற்றி எப்படி விளக்க வேண்டும் என்று கூறும்போது, குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பர்னீ சீகல் பற்றிக் குறிப்பிட்டுள்ளதுதான், புத்தகத்திலேயே மிகச் சிறந்த பகுதியாகத் தோன்றுகிறது. டாக்டர் சீகலிடம், சிகிச்சை பெற்று, வந்த, 18 வயது பெண் ஒருவருக்கு, கீமோதெரபி கொடுத்தபோது, தலைமுடி அனைத்தும் கொட்டி, தலை வழுக்கையானது. இதைக் கண்டதும் அந்தப் பெண்ணின் மனம் சுக்கு நூறாகிவிட்டது. புற்றுநோயிலிருந்து விடுபட்டுவிட்டாயே… தலைமுடி போய் விட்டதே என, ஏன் வருத்தப்படுகிறாய்? என டாக்டர் சீகல் கேட்கப் போக, அந்தப் பெண், அவரை ஒரு முறை முறைத்தாரே பார்க்கணும்… அன்று முழுவதும் தூக்கம் வராமல் தவித்த டாக்டர், அடுத்த நாள், கிளீன் மொட்டையாக வந்தார் மருத்துவமனைக்கு. நோயாளிகளின் மன வலியைப் போக்க, வாழ்நாள் முழுதும், இதே தோற்றத்துடன் இருந்துவிட்டார். தலைமுடி கொட்டி விட்டதாக வருதப்படாதே இங்கே பார் இந்த மொட்டைத் தலையுடன் நான் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறேன். அதுபோல் தான் நீயும் இருக்கிறாய் எனச் சொல்லித் தேற்றவே இந்த ஏற்பாடு. மனச் சோர்வுடன் இருப்பவர்கள் படித்துத் தேற வேண்டிய நூல் இது. -பானுமதி. நன்றி: தினமலர், 14/9/2014.

Leave a Reply

Your email address will not be published.