நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள்
நாயக்கர் காலக் கலைக்கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 336, விலை 375ரூ.
நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது. நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து அத்தன்மைகள் அக்காலத்தில் தோன்dறிய இலக்கியங்களில் இருக்கின்றனவா? என்றும் ஆராய்கிறது. உதாரணமாக நாயக்கர் கால திருமால் கோவில்களில் சிவன் தொடர்பான சிற்பங்களும், சிவன் கோயில்களில் திருமால் தொடர்பான சிற்பங்களும் வடிக்கப்பெற்றுள்ளன. தாடிக்கொம்பு சௌந்திரராச பெருமாள் கோயில் மண்டபத்தில் திருமால் தொடர்பான மகாவிஷ்ணு, திருவைகுண்டநாதர், இராமர், நரசிம்மர், வேணுகோபாலன், உலகளந்தபெருமாள் ஆகியோரின் சிற்பங்களுடன், நடராசர், தில்லைக்காளி, அகோர வீரபத்திரர் முதலிய சிவபெருமான் தொடர்பான சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. சிற்பங்களில் இத்தகைய சமய ஒருமைப்பாடு காணப்படுகிறது. அதுபோலவே நாயக்கர் காலத்தில் தோன்றிய நெல்லிநகர் அருளாளதாசரால் இயற்றப்பட்ட பாகவத புராணம் ஒரு வைணவ நூல். எனினும் அது சிவனைப் போற்றுகிறது. முக்கூடற் பள்ளுவில் சைவ, வைணவ தெய்வங்களைப் போற்றுவதுடன், நாட்டுப்புறச் சிறுதெய்வங்களை வழிபடும் நிகழ்வுகளும், சடங்குகளும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம் அனைத்திலும் உள்ள பொதுவான தன்மைகள் எவ்வாறு கலைக்கோட்பாடுகளாக உருவாகின என்பதை விளக்கும் அரிய சிறந்த நூல். நன்றி: தினமணி, 15/9/2014.