நிச்சய வெற்றி
நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற இன்றைய உலகில் வளர்ந்து வரும் இளைஞர்கள் வெற்றியாளர்களாகவும், தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் தங்களை உருமாற்றிக் கொள்ளத் தேவையான பல தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்வது, இலக்குகளை எப்படி நிர்ணயித்துக் கொள்வது, கூட்டுப் பணி எப்போது தேவைப்படும்… இப்படிப் பல விஷயங்களை உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். தவிர, சச்சின், மர்வன் அட்டபட்டு, ரோஜர், நவ்ஜோத்சிங் போன்ற பிரபலமான சாதனையாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்களுடன், தன்னம்பிக்கையூட்டும் சமூக, வரலாற்றுக் கதைகளையும் கலந்து, படிப்பவர்களின் மனதில் நம்மாலும் முடியும் என்ற எழுச்சியை ஏற்படுத்தும்படி இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். The Habit of Winning என்ற தன்னம்பிக்கையூட்டும் இந்த ஆங்கில நூலை, அனைவரும் படித்துணர எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 22/10/2014.
—-
ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி. மோகன், அதிர்வு பதிப்பகம், சென்னை 600005, பக். 671, விலை 500ரூ.
To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-4.html சி. மோகன் அவர்களின் விசேஷ இலக்கிய அறிவையும் உணர்வையும் தமிழ்ப் பிரசுர உலகில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய நெடுங்கதையாகிய தண்ணீர் அவருடைய திருத்தங்களால் மெருகு பெற்றது. அவருடன் நான் ஒரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு தயாரிப்பதில் பங்கு பெற்றேன். அவருடைய மொழிபெயர்ப்பில் புகழ்பெற்ற ஒரு சீன நாவல் தமிழில் வெளிவந்திருக்கிறது. ஓநாய் குலச்சின்னம் சீன மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் லட்சக்கணக்கான வாசகர்களை மகிழ்வித்திருக்கிறது. நவீனப் படைப்பிலக்கியத்தில் இது சற்றுத் தீவிரமான நூல். ஜயாங் ரோங் என்பவர் எழுதிய இந்த நூலைச் சென்னை அதிர்வு பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. நன்றி: குங்குமம், 20/10/2014