கம்பன் தமிழும், கணினித் தமிழும்
கம்பன் தமிழும், கணினித் தமிழும், முத்துநிலவன், தஞ்சை அகரம் பதிப்பகம்.
திருக்குறளில் தமிழ், தமிழ்நாடு வார்த்தைகள் இல்லாதது ஏன்? தஞ்சை அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, முத்துநிலவனின் கம்பன் தமிழும், கணினித் தமிழும் என்ற இலக்கிய விமர்சன நூலை அண்மையில் படித்தேன். பழங்கால இலக்கிய கணிப்பும், நவீன இலக்கிய கண்ணோட்டமும் உள்ள இந்நூல், அண்மைக் காலத்தில் வெளியான இலக்கிய விமர்சன நூல்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் ஒரு கட்டுரையில் பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாட்டுக்கு இரண்டாம் பரிசும், ஆ. மாதவய்யாவின் கொல்லன் தெதுருவில் ஊசி கூறி விலைகள் பேசி, இல்லை திறமை சீ சீ என்று நம்மையும் ஏசி என்ற பாட்டுக்கு முதல் பரிசும் கிடைக்கிறது. பாரதியின் பாட்டுக்கு ஏன் இரண்டாம் பரிசு என, ஆய்வு செய்கிறார் நூல் ஆசிரியர். இரு பாடல்களும் மேற்கத்திய எதிர்ப்புப் பாடலாக இருந்தாலும், பாரதியின் பாட்டில், பாயுது, பறக்குது என்ற கொச்சை தமிழ் இருந்ததால், இரண்டாம் பரிசை நடுவர்கள் அளித்துள்ளனர். அந்த காலத்தில் சிறந்த நடுவர்கள் இல்லையா என கேலியாகக் கேட்கிறார். இதேபோல் ஒரு ஜெயகாந்தனும், சில ஜெயகாந்தன்களும் என்ற கட்டுரையில், ரிக்ணாகாரன் சித்தாள் போன்ற விழிம்பு நிலை மக்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு கதைகள் எழுதிய ஜெயகாந்தன் பிற்காலத்தில் உயர் நடுத்தர மக்களை மைமாக வைத்துக் கதை எழுதியுள்ளார். இந்த மாற்றத்தை ஜெயகாந்தன் படைத்த முந்தைய கதாபாத்திரங்களே, ஜெயகாந்தனிடம் கேள்வி கேட்கின்றன. உயர் நடுத்தர மக்கள் பற்றி எழுத எத்தனையோ பேர் உள்ளார்கள். எங்களைப் போன்ற விழிம்பு நிலை மக்களின் இலக்கியத்தை எழுத நீதான் இருந்தாய். இப்போது எங்களை கைவிட்டது ஏனோ? என கேட்பதாக எழுதியுள்ளார். ஜெயகாந்தனை விமர்சிக்க அஞ்சியவர்கள் மத்தியில், அவரது நல்லது, கெட்டதை இந்நூல் தைரியமாக விமர்சிக்கிறது. தமிழர்கள் பொதுமறை என, அழைக்கப்படும் திருக்குறளில், தமிழ் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் இல்லை. மொழியைத் தூக்கிப் பிடிக்கும் பழக்கம், அந்தக் காலத்தில் இல்லை. பிற்காலத்தில்தான் எழுந்தது என்பதை, மிகவும் சுவையாகச் சொல்கிறது இக்கட்டுரை. அதே நேரத்தில் இலக்கிய விமர்சனம் குறித்தும் தன் பார்வையை, நூல் ஆசிரியர் முன் வைக்கிறார். தமிழில், நடுநிலையோடு இலக்கிய விமர்சனம் செய்வோர் இல்லை என்ற வருத்தத்தை நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். -அருணன், எழுத்தாளர். நன்றி: தினமலர், 30/11/2014.