சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ.
அரிய தகவல்களின் தொகுப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியோர் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறுவதற்கும் அதைத் தொடர்ந்த திராவிட அரசியல் எழுச்சி பெறுவதற்கும் இந்த சம்பவம் மிக முக்கியமான காரணம் ஆயிற்று. அந்த காலகட்டத்தில் சுதேசமித்திரன், தி இந்து, குமரன், ஊழியன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் வ.வே.சு. ஐயரை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து பலரும் கருத்துகளை வெளியிட்டனர். தேசியக் கல்வியை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த குருகுலத்துக்கு முதலாண்டுச் செலவு 10,200 ரூபாய் ஆகும் என்று தோராய திட்ட செலவைத் தயாரித்த வ.வே.சு. ஐயருக்கு 10,000ரூபாய் காங்கிரஸ் கட்சி தருவதாக ஒப்புக்கொண்டு பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது 5000 ரூபாய் வழங்கப்பட்டது. அது அல்லாமல் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் நிதி வழங்கினர். குருகுலத்தில் ஏற்றத்தாழ்வு காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பலரும் இந்த சாதிய நடைமுறைகளை மாற்றச்சொல்லிக் கேட்கையில் வ.வே.சு. ஐயர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நிதியைத் திருப்பித் தரும்படி கேட்கப்படுகிறது. அதற்கும் அவர் ஒப்புக்கொள்ளாமல் குருகுலப் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறார். இந்த வாத பிரதிவாதங்களைத் திரட்டித் தொகுத்து மிக முக்கியமான ஆவணமாக நூலாசிரியர் பழ. அதியமான் பல்லாண்டு உழைப்பைச் செலுத்தி அளித்துள்ளார். பலராலும் கவனத்தில் கொள்ளப்படாத பல ஆவணங்களையும் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அரிய படங்களும் பின்னிணைப்புகளுமாக சேரன்மாதேவி குருகுலப் பிரச்னை பற்றிய முழு ஆய்வுத் தொகுப்பாக இதைக் கருதலாம். திராவிட இயக்க ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய நூல். நன்றி: அந்திமழை, 1/11/2014.