உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்
உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 216, விலை 195ரூ.
நூல் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர்தான் பயணம் செய்த நாடுகளில் படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான 100 கதைகளை தொகுத்திருக்கிறார். கவலைக்கும் பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை. எடிசனின் சில நிமிட பொறுமை, ஒரு லட்சம் டாலர்களை பெற்றுத் தநத்து. இலவசமாக வழங்கப்படும் எதற்குமே மதிப்பு இருக்காது போன்ற பல்வேறு கருத்துக்களை ரசிக்கும் வகையில் தொகுத்திருக்கிறார். புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ள எஸ். ராமன், குறை சொல்ல முடியாத அளவிற்கு தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சாதாரண ஒரு சம்பவம் அல்லது கதை. அது தொடர்பான ஒரு கேள்வி. அது உணர்த்தும் கருத்து இதுதான் இப்புத்தகம். ஆனால் அத்தனையிலும் வாழ்வின் சாரம்சங்களை தொட்டிருக்கிறார். -கலா தம்பி. நன்றி: தினமலர், 12/10/2014.
—-
நபிகள் நாயகம் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், பக். 128., விலை 75ரூ.
சொர்க்கம் தாய்மார்களின் காலடியில் இருக்கிறது என்று பெண்ணின் பெருமையை உணர்த்தியவர் நபிகள் நாயகம். தன் சகோதரரின் உழைப்பில் வாழ்ந்து, இரவும், பகலும் இறைவனை வணங்கிய பக்திமானைவிட, குடும்பத்தின் தேவைக்காக நியாயமான வழியில் விறகு வெட்டி பிழைத்த அவரின் சகோதரர் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என எடுத்துக்கூறியவர். நீ எவ்வளவு கண்ணீர் விடுகிறாயோ, அவ்வளவு பாவம் மன்னிக்கப்படும். அது மட்டுமல்ல, உன் பாவத்தால் பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலன்றி, ஆண்டவனும் மன்னிக்க மாட்டான் என பகர்ந்தவர், உண்ணுவதற்கு ஒன்றும் கிடைக்காத பாலைவனத்தில் அவதரித்திருந்தாலும், ஜீவகாருண்ய உளளங்கொண்டவராய் வாழ்ந்தார் நபிகள் நாயகம். பிறரை நேசித்த நபிகள் பிற மதங்களையும் நேசித்தார் என, நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நிகழ்வுற்ற, நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகளும், உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிக்க சோதனைகளும் படிப்போர்க்கு நன்னெறியைப் புகட்டுகின்றன. நிகழ்வுகளுக்கேற்ற குறட்பாக்களை ஆங்காங்கே தொடர்புபடுத்தி உள்ளார் நூலாசிரியர். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 12/10/2014.