என் உயிரே என் உறவே
என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ.
சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் என்பதற்காகவே, அவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள் கீர்த்தனா. கல்யாணம் ஆன புதிதில் பாலா கீர்த்தனா உறவில் விரிசல். காலம் மனப்புண்ணை ஆற்றி, பாலாவையும் கீர்த்தனாவையும் ஒன்று சேர்க்கிறது. இடையிடையே சில பாடல்களையும் இணைக்கிறார் பிரவீணா. விறுவிறுப்பான நாவல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 12/10/2014.
—-
வெற்றித்தூண், வரலாற்று நாடகங்கள், ப. சங்கரலிங்கனார், ப. சங்கரலிங்கனார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 150ரூ.
இந்த மண்ணில் வாழ்ந்து, வரலாற்று நாயகர்களாக இன்று நம்மால் பூஜிக்கப்படும் உத்தமர்களது வாழ்க்கையின் சுவையான செய்திகளை நாடகமாக்கி தந்துள்ளார் நூலாசிரியர். காவடிச்சிந்து என்ற தலைப்பில் துவங்கி, மனமாற்றம் வரை மொத்தம் 14 தலைப்புகளோடு புத்தகம் வெளிவந்துள்ளது. ஊற்றுமலை அரசர் மருதப்பர், பாண்டித்துரைத் தேவர், வ.உ.சி. பாஸ்கர சேதுபதி, மனுநீதி சேதுபதி, வெள்ளையத்தேவன், வேலு நாச்சியார், ஊற்றுமலை இளவரசர் சீவலவர், சேரன் செங்குட்டுவன், பொய்கையார், கண்ணபிரான், புத்தர் ஆகிய வரலாற்று நாயர்களை நாடக கதாநாயகர்களாக உருவாக்கி, துணைப் பாத்திரங்களோடு 14 நாடகங்களை சுவை குன்றாது, நல்ல தமிழில், கற்பனை கலக்காது நிகழ்ச்சிகளை வடிவமைத்து நாடகத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் நூலாசிரியர். தமிழர் அறமும், மறமும் பொலிவு பெற, ஒவ்வொர் கல்லூரியிலும் இந்நாடகங்கள், கல்லூரி மாணவர்களால் அரங்கேற்றப்பட வேண்டும். -குமரய்யா. நன்றி: தினமலர், 12/10/2014.