நினைவு நாடாக்கள்
நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, விகடன் பதிப்பகம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-7.html
கவியரசர் கண்ணதாசனுக்கு ஒப்பாக வைத்து பாராட்டப்படுபவர் இந்நூலாசிரியர். இவர் கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் திரைத் துறையில் நுழைந்தது முதல் அதில் கோலோச்சியது வரை அத்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவுகூறும்போது, நம்மையும் அந்தச் சூழலுக்கு கூட்டிச் செல்கிறார். தவிர இவரது எழுதிதும், நடையும் செறிவூட்டப்பட்ட புதிய தமிழை நமக்குக் கற்றுத் தருகிறது. இந்நூலில் உள்ள 50 கட்டுரைகளும், முன்பு ஆனந்த விகடனில் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதில் வரும் சினிமா, இலக்கியம், ஆன்மிகம், நட்பு என்று பல விஷயங்களையும் எப்படி இவரால் இவ்வளவு பசுமையாக நினைவுகூற முடிகிறது என்று வியக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களை உள்ளபடி நன்றி பாராட்டுவது அவரை மேலும் உயர்த்துகிறது. பிறையும் வில்லும் என்ற 30வது கட்டுரையில், வைதீக பிராமண குலத்தில் பிறந்த தனக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்தது முதல் தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்த சில இஸ்லாமிய நண்பர்களின் பங்கை நன்றி பெருக்குடன் கூறுவது அவரது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது. இப்படி வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ரஜினி, கமல், எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., இளையராஜா என்று சினிமாவின் அனைத்துத் துறையினரைப் பற்றிய இவரது அனுபவங்கள் படிக்கச் சுவையானவை. -பரக்கத். நன்றி: துக்ளக், 17/11/13.
—-
மலரும் உள்ளம், பாரி புத்தகப்பண்ணை, 88/84, பிராட்வே, சென்னை 108, விலை 75ரூ.
குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதில் தலைசிறந்து விளங்கியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட மலரும் உள்ளம் புத்தகத்தின் முதல் தொகுதி. ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இரண்டாம் தொகுதி இப்போது வெளிவந்துள்ளது. சிறந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/12/13.