நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்
நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம், மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான், விகடன் பிரசுரம், விலை 350ரூ.
இந்தியாவும் விடுதலையும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு என்று எழுதிக் குவித்த திரு.வி.க.வுக்கு முதுமையில் பார்வை லேசாக மங்க ஆரம்பித்தது. அதற்காக, எழுதிய கை சும்மா இருக்குமா? பார்வை குறைந்த பிறகுதான் இருளில் ஒளி படைத்தார். படைப்பாளிக்கு சிந்தனைதான் பார்வையே தவிர, கண் அல்ல. இதோ இரண்டு படைப்பாளிகள். ஒருவர் இருளில் அனுபவித்த வாழ்க்கையை வெளிச்சம் பெற்றதும் நாவல் ஆக்கி இருக்கிறார். இன்னொருவர், வெளிச்சத்தில் பார்த்த காட்சிகளை இருளில் ஓவியமாகத் தீட்டி வருகிறார். முன்னவர் எழுத்தாளர் தேனி சீருடையான். அடுத்தவர் ஓவியர் மனோகர் தேவதாஸ். இருளும் ஒளியுமான இந்த இருவரது படைப்புகளையும் ஒரே புத்தகமாக கொண்டு வந்துள்ளது விகடன் பிரசுரம். இந்த புத்தகத்தை நீங்கள் எந்தப் பக்கமாக இருந்தும் புரட்டத் தொடங்கலாம். ஒரு பக்கம் புரட்டினால், மனோகர் தேவதாஸின் ஓவியங்களின் மூலமாகவும் இன்னொரு பக்கம் புரட்டினால் தேனி சீருடையானின் நாவல் மூலமாகவும் பயணப்படலாம். நினைவு தெரிந்த நாளில் இருந்து ஓவியர் வரைகிறார் மனோகர் தேவதாஸ். அவரது மதுரை நினைவுகள், புத்தகம் மதுரையின் பழைமையைக் காப்பாற்றும் கலங்கரைவிளக்கம். 2008-க்குப் பிறகு பார்வை முற்றிலுமாக குறைந்தது. லேசாக பார்வையை இழந்து கொண்டிருந்த அந்தக் கணத்தில், வரைந்த 24 ஓவியங்கள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இதில் உள்ள படங்களை மனோகர் தேவதாஸால் இப்போது பார்க்க முடியாது. இந்த ஓவியங்களை நாம் பார்க்கும்போது நம் கண்கள் துடிக்கின்றன என்று முன்னுரையில் சொல்கிறார் எழுத்தாளர் சு. வெங்கடேசன். அப்படியே புரட்டிப் போட்டால் அது தேனி சீருடையான் கதை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இவருக்குப் பார்வை போய்விடுகிறது. எத்தனையோ சிகிச்சை செய்கிறார்கள். பலன் இல்லை. பார்வையற்றோர் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படிக்கிறார். அதன் பிறகு சோதனை செய்த மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்று சொல்லி… சிகிச்சை செய்ய… 10 ஆண்டுகள் கழித்து இந்த உலகத்தைப் பார்க்கிறார். பார்வை கிடைத்ததால், பார்வையற்ற பள்ளியில் படித்த கல்வி அவருக்குப் பயன்படவில்லை. பழக்கடை வைத்தார். அவருக்குள் ஒரு படைப்பாளி இருந்தான். பார்வையற்றோர் பள்ளியில் படித்த தனது வாழ்க்கையை நிறங்களின் உலகம் என்ற நாவலாக எழுதினார். இரண்டையும் ஒருசேர தரிசித்தால் நம் அகக்கண் திறக்கும்! -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 14/1/2015.