நீராதிபத்தியம்
நீராதிபத்தியம்,(புளு கோவிநட்), ஆங்கிலம் மார்ட் விக்டோரியா பார்லோ, தமிழில் சா.சுரேஷ், எதிர்பதிப்பகம்.
மார்ட் விக்டோரியா பார்லோ ஆங்கிலத்தில் எழுதிய புளு கோவிநட் என்ற நூலை சா. சுரேஷ் நீராதிபத்தியம் என தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். எதிர் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சர்வதேச தண்ணீர் நெருக்கடியால், தண்ணீர் ஓர் உரிமை என, உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் பற்றி, இந்த நூல் பதிவு செய்துள்ளது. இன்று, பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரையே அனைவரும் குடிக்கிறோம். அதை குழந்தையைப்போல, போகுமிடம் எல்லாம் ஆரத் தழுவிக்கொண்டே செல்கிறோம். பாட்டில் தண்ணீர் குடிக்காமல், வேறு தண்ணீர் பருகினால், வியாதி வந்து விடும் என்ற எண்ணமும், நம்முள் தோன்றத் துவங்கிவிட்டது. இந்த நூலை மொழிபெயர்க்கத் துவங்கும்போது, நானும் பாட்டில் தண்ணீரோடுதான் உட்கார்ந்தேன். ஆனால் மொழிபெயர்த்து முடிக்கும்போது, தண்ணீர் பாட்டிலை விட்டுவிட்டு, செம்பில் தண்ணீரை வைத்துக்கொண்டேன். இந்தளவு, என்னுள் மாற்றத்தை ஏற்படுத்திய என, மொழிபெயர்ப்பாளர் கூறுவதே, தண்ணீரின் அருமையை உணர்த்துகிறது. குளங்களுக்கு தண்ணீர் எடுக்க மட்டுமே செல்ல மாட்டோம். அவற்றை பாதுகாக்கவும் செல்வோம் என, ஆப்ரிக்க மக்கள் சொல்வதும், மூன்றாம் உலக யுத்தம் ஏற்படுமானால், அது தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என, கூறுவதும் தண்ணீர் தேவையையும், அதை சேமிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. தாமிரபரணி போன்ற தமிழக ஜீவ நதிகளை, தனியார் குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, மக்கள் நடத்தும் போராட்டங்களை, இந்த நூல் நம்முன் நிறுத்துகிறது. தண்ணீரை வியாபாரம் ஆக்குவதை எதிர்பப்தோடு, மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை வீணாகாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்பு நமக்கும், அரசுக்கும் அவசியம் என உணர்த்துகிறது. ஒரு இடத்தில் தண்ணீர் கிடைக்காமல், சில நாட்கள் கடும் துயரம் நிலவுகிறது. அதே இடத்தில், சில நாட்கள் கடும் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இரண்டையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்கு, நீர் மேலாண்மை அவசியம். இல்லையேல், தண்ணீரால் போராடிக்கொண்டேதான் இருப்போம். -சித்தார்த்தன் சுந்தரம். (எழுத்தாளர்). நன்றி: தினமலர், 22/11/2015.