நீளும் கனவு

நீளும் கனவு, கவின்மலர், கயல்கவின் பதிப்பகம்.

அண்ணன் மனதில் மறைந்திருக்கும் வக்கிரம் நீளும் கனவு என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். எழுத்தாளர் கவின்மலர். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகள் இவை. கயல் கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல கதைகள் இருந்தாலும் அண்ணன், இரவில் கரையும் நிழல்கள் என்ற இரு சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தவை. பெண்ணுடன் பிறக்கும், ஆண்களை அண்ணன், தம்பி என அழைக்கிறோம். அதேநேரத்தில் உடன் பிறவாத மூன்றாம் நபராக இருக்கும் ஒரு ஆணையும் அண்ணன் என அழைப்போம். அவர் உடன் பிறக்கவில்லை என்றாலும், அண்ணன் என்ற உறவை பெண்கள் அவருக்கு அளிக்கின்றனர். இதுபோன்ற, அண்ணன் உறவை பெற்ற ஆண்கள் மனதில், அண்ணனுக்கான குணங்கள் இல்லாமல், பெண் மீதான வக்கிரம் அவர்கள் மனதில் ஒளிந்து கொண்டிருப்பதை, அண்ணன் சிறுகதை வெளிப்படுத்துகிறது. நானும் இதுபோன்ற கட்டங்களை கடந்து வந்ததால், இந்த சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. அதேபோல், இரு பெண் தோழிகள், சிறு வயது முதல் மிக நெருக்கமான நட்புடன் இருக்கின்றனர். அதில் ஒருத்தி திருமணமாகி சென்றுவிடுகிறாள். மற்றொருத்தி எழுத்தாளராகிறாள். நீண்ட ஆண்டுகளுக்கு பின், இருவரும் சந்திக்கின்றனர். எழுத்தாளரான பெண், தன் தோழி முன்னைப்போல இருப்பாள் என, எதிர்பார்க்கிறாள். ஆனால் அந்த சிறுவயது நட்பு அவளுக்கு கிடைக்கவில்லை. உறவுகள், பணம், பொருளுக்காக இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டு, சம்பிரதாயத்துக்காக, அவள் சிரிப்பதும், பழகுவதும், எழுத்தாளரான தோழிக்கு பெரும் வலியை ஏற்படுத்துகிறது. இந்த வாழ்க்கையை இரவில் கரையும் நிழல்கள் சிறுகதை சொல்கிறது. யதார்த்த வாழ்வை தொலைக்கும் மனிதர்களின் இந்த கதையும் என்னை பாதித்தது. மனித உறவுகள், உணர்வுகள், வாழ்க்கை ஓட்டத்தில் அவர்கள் தொலைத்துவிட்ட இயல்பான குணங்களை, நீளும் கனவு சிறுகதை தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய சமூக சூழலில், மனித வாழ்க்கை முறையும், அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, சிறப்பாக படம்பிடிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. -பிரியாபாபு, திருநங்கை. நன்றி: தினமலர், 13/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *