மகாபாரதம்
மகாபாரதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக். 512, விலை 217ரூ.
நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர். வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது போல, அநேக அறநெறிகள் உறையும் கற்பகத்தரு மகாபாரதம் என்பதை அருணகிரிநாதரே ஒரு திருப்புகழில் கூறியுள்ளார். மகாபாரதத்தில் இருந்து இந்துக்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த வேதம்தான் கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத்கீதை. மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்னும் தத்துவத்தினை பலருடைய கதாபாத்திரங்களின் வாயிலாக விளக்குகிறது மகாபாரதம். நம்ப முடியாத பல சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், அந்தச் சம்பவங்களின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தக்கூடிய நீதிநெறிகள் பலவும் மகாபாரதத்தில் உள்ளன. எந்தவொரு காப்பியத்தையும், இதிகாசத்தையும், புராணத்தையும், சைவசித்தாந்தத்தையும் பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையில் அவற்றை அப்படியே சாறுபிழிந்து சுருங்கச் சொல்லி சிலகதைப்பின்னல்களோடு விளங்கவைக்கக்கூடியவர் வாரியார் சுவாமிகள். மகாபாரதம் ஓர் அருமையான இதிகாசம் என்பதைவிட, அருமையான மொழிநடையில் அதைக் கொண்டு சென்றுள்ள வாரியாரின் பதிவு அற்புதம் எனலாம். நன்றி: தினமணி, 14/7/2014.
—-
இறைவன் தந்த பரிசு, ம. கதிர்வேல், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 35ரூ.
நாட்டு நடப்புகளை எளிய தமிழில் கவிதைகளாக எழுதியுள்ளார் ஆசிரியர். கண்ணீர் சிந்தும் ஜீவன், உழைத்துப்பார் போன்ற கவிதைகள் சிந்திக்க தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 2/7/2014.