ரேஷன் கார்டு கையேடு
ரேஷன் கார்டு கையேடு, ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.
மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு. இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விவரங்கள் இதில் விளக்கமாக உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் ரேஷன் கார்டு பற்றி ஏ முதல் இசட் வரையில் உள்ள எல்லா தகவல்களும் இதில் அடங்கியுள்ளன. கார்டு வாங்குவதற்கான விண்ணப்ப மனுவும் இணைக்கப்பட்டுள்ளது. மிகப் பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/7/2014.
—–
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை.
ஆசிரியர் மாணவரின் குருபக்திக்கு இலக்கணமாகத் திகழ்கிறது இந்தச் சரித்திரம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையர்வகளின் முதன்மைச் சீடரான தமிழ்த் தாத்தா உ.வே.சா. தன் குருநாதரின் மீது கொண்ட அளப்பரிய குருபக்தியின் காரணமாக உருவாக்கியதே இந்நூல். தன் ஆசிரியரிடம் நேரில் அனுபவித்தவை, ஆசிரியரிடம் கேட்டறிந்தவை, நூல்களின் வழி அறிந்தவை, கடிதங்கள் போன்றவைதான் இச் சரித்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. இரு தொகுதிகளாக உ.வே.சா. எழுதிய வெளியிட்டதை ஒரே தொகுதியாகக் கொண்டு மூலநூலிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் மறுபதிப்பு செய்துள்ளனர். நன்றி: தினமணி, 14/7/2014.