நூலின்றி அமையாது உலகு
நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யும் இரா. மோகன் எழுத்தில், வானதி பதிப்பகம் வெளியிட்டு உள்ள நூலின்றி அமையாது உலகு என்ற புத்தக வாசிப்பு தொடர்பான புத்தகத்தை, சமீபத்தில் படித்தேன். பேசுவதை போன்ற எளிய நடையுடன் பயணிக்கும் அந்த நூல், புத்தகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து, புத்தகம் பற்றிய பழமொழிகள் என, பல தடங்களில் பயணித்த அனுபவத்தை தந்தது. வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யவும், பேசியே பழகிவிட்டவர்களை எழுத செய்யவும், எழுதி கொண்டே இருப்பவர்களை, புதிதாய் சிந்திக்க செய்யவும் முயற்சிக்கிறது. அந்த நூல், அதில் இடம் பெற்றுள்ள, அட்டையிட்ட அமுதம் அல்லவோ புத்தகம் என்ற வைரமுத்துவின் வரிகளும், பத்து பறவைகளோடு பழகி பாருங்கள். நீங்கள் ஒரு பறவையாகி விட முடியாது. பத்து நதிகளோடு பழகிப் பாருங்கள். நீங்கள் ஒரு நதியாகி விடமுடியாது. பத்து புத்தகங்களோடு பழகி பாருங்கள். நீங்கள் பதினோறாவது புத்தகம் ஆவீர்கள் எனும் ஈரோடு தமிழன்பனின் வரிகளும், புத்தக பிரியர்களின் மனதை வருடும். சுரதாவின் படுக்கையில் எப்போதும் புத்தகங்களே இருக்கும். சுரதா கீழே உறங்குவார் போன்ற தகவல்களும், மு.வ. தஞ்சை கவிராயர், அண்ணா, ஜெயகாந்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த புத்தகங்கள் குறித்த சம்பவங்களும், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு தெருவில், ஒரு சிறிய வீடும், பெரிய பங்களாவும் அருகருகில் இருக்கின்றன. இரண்டாவது வீடு, ஒரு பேச்சாளரின் வீடு. முதல் வீடு, பேச்சாளருக்கான கருத்துகளை எழுதும் எழுத்தாளரின் வீடு என இறையன்புவின் கதையின் மூலம் வெளியாகும், எழுத்தாளர்களின் இன்றைய பரிதாபத்துக்குரிய நிலையை உணர முடிகிறது. காட்சி ஊடகங்களின் பெருக்கத்திற்கு பின், பேச்சாளர்கள் வேகமாக வளர்ந்திருக்கின்றனர். அதேநேரம், நல்ல எழுத்தாளர்களுக்கு, போதிய ஊதியம் கொடுக்கவும், அவர்களின் சிந்தனைகளை எடுத்துச் செல்லவும், ஊடகங்கள் தயாராக வில்லை போலும். எப்போதும் வாசிக்க வேண்டும். வாசித்ததை பேச வேண்டும். புதிய கருத்துகளை, புத்தகங்களாக்க வேண்டும் எனும் சிந்தனையை வளர்க்கும் அந்த புத்தகம், எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பரவசமானது. -ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், எழுத்தாளர். நன்றி: தினமலர், 7/12/20.