நெருடல்
நெருடல், அ. இருதய ராஜ், நேர்நிரை, சென்னை, விலை 70ரூ.
நமது காலம் பல்வேறு எரியும் பிரச்சினைகளின் களமாக இருக்கிறது. அன்றாடம் நாம் பத்திரிகைகளில் கண்டு கடந்து செல்லும் செய்திகள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு மீள் பார்வையும் பரிசீலனையும் அவசியமாக இருக்கிறது. அ. இருதயராஜின் இந்தக் கட்டுரைகள், பல்வேறு சமகாலப் பிரச்சினைகளைப் பற்றிய கேள்விகளை நம்முன் எழுப்புகிறது. தலித் அரசியல், சமகம், வெகுசன ஊடகங்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகம், பொருளாதாரம், கல்வி என பல பிரிவுகளில் அமைந்த இந்தக் கட்டுரைகள் பல்வேறு விவாதக் குறிப்புகளை வாசகன் முன் இட்டுச் செல்கின்றன. லண்டனில் ஷில்பா ஷெட்டிக்கு நிகழ்ந்த அவமானத்திற்காகத் துடித்த ஊடகங்கள், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை என்று கேட்கும் இருதயராஜின் தார்மீகக் கோபம் அவரது எல்லாக் கட்டுரைகளிலும் பிரதிபலிக்கிறது. பொது வாசகர்களை முன்னிறுத்தி எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பல்வேறு விவாதப் புள்ளிகளை உருவாக்குகின்றன. நன்றி: குங்குமம், 22/10/2012.
—-
அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறும், ரா.பி. சகேஷ் சந்தியா, ரியோ பதிப்பகம், திருநெல்வேலி, விலை 40ரூ.
இந்தியர்கள் பொதுவாக கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் மட்டுமல்ல, மனிதக் கடவுள்களையும் தீவிரமாக நம்பக்கூடியவர்கள். ஒரு உண்மையைப் பற்றிய பல கூற்றுகளை ஆராய்ந்து தெளிவதைவிட தங்கள் சார்பாக யாராவது ஒரு முடிவைக் கூறினால் அதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உள்ள விருப்பம் அலாதியானது. கூடங்குளம் விவகாரத்தில் கடுமையான எதிர்த்தரப்புகள் மோதிக்கொண்ட நிலையில் ஒருநாள் திடீரென ஒருநாள் அப்துல் கலாமே சொல்லிவிட்டாரே அப்புறம் என்ன? என்று ஆரம்பித்தனர். இந்த நூல் அப்துல் கலாமின் அணு உலை ஆதரவு எவ்வளவு அர்த்தமற்றது என்பதைப் பல்வேறு விஞ்ஞான ஆதரங்களுடன் விவரிக்கிறது. சர்வதேச உதாரணங்கள் பல முன்வைக்கப்படுகின்றன. நாட்டை பாதிக்கும் பல பிரச்னைகளுக்கு அறிவியல் ரீதியாக எந்தத் தீர்வும் சொல்லாத கலாம், இந்தப் பிரச்னையின்பால் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்கிற கேள்வியையும் ஆசிரியர் முன்வைக்கிறார். நம்பிக்கைக்கு அப்பால் நம் அறிவைக் கோரும் சிறுநூல். நன்றி: குங்குமம், 12/10/2012.