குற்றாலக் குறிஞ்சி
குற்றாலக் குறிஞ்சி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 360, விலை 275ரூ.
1992ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. தஞ்சையில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்த குறிஞ்சி என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த பாடகியின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது. சரபோஜி மன்னராகட்டும், அக்காலத்தில் இருந்த பல ஜமீன்தார்களாகட்டும், குறிஞ்சியி இசையைவிட அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய முயல்கின்றனர். பாடகி என்ற கர்வத்தோடும், பெருமையோடும் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் பணிய மறுக்கிறாள் குறிஞ்சி. அவளுடைய காதலன் சிறை வைக்கப்படுகிறான். அவன் விடுதலையாகப் போகிற நேரத்தில் சிவகங்கை இளைய ஜமீன்தார் இளைய வல்லபதேவ உடையாருக்கு குறிஞ்சி எழுதிய கடிதம் சுவைமிக்கது. நானும் கொலைக்குற்றத்திலிருந்து விடுதலையாகப் போகிற என் காதலன் ஞானசுந்தரமும், நாங்கள் கண்டுபிடித்த, எங்களுக்கே சொந்தமான, அபூர்வ ராகமான குற்றாலக் குறிஞ்சியை இவர் முன் மனம் குளிரப்பாடுகிறோம். நாங்கள் பாடத் தவறினால் இந்த ராகம் மேற்சொன்ன ஜமீனுக்கு அடிமையாகிவிடுகிறது. இந்த ராகத்தை மீட்காமல் நான் வேறு எங்கும் அதைப் பாடமாட்டேன் என்று சத்தியம் செய்து அடகு வைக்கிறேன். நாங்கள் இருவரும் எப்போது வந்து பாடுகிறோமோ, அப்போது வந்து மீட்டுக் கொள்கிறோம். ராகத்தை அடகு வைக்கும் இவை போன்ற பல சுவைமிக்க சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன. வரலாற்று நாவல்களென்றால் அதன் நடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வழக்கமான இலக்கணத்தை மீறாத நடையழகுடன் மிளிரும் நாவல். நன்றி: தினமணி, 17/3/2014.
—-
க.ப. அறவாணனின் வானொலி உரைகள், தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 60ரூ.
நாள்தோறும் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவற்றுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து, தமிழறிஞர் க.ப. அறவாணன் வானொலியில் வழங்கி வந்த உரைகளின் தொகுப்பு மேலானவை என்ற இந்த நூல். இதில் உள்ள கட்டுரைகள் (உரைகள்) எத்தகையவை? அறவாணன் முன்னுரையிலேயே விடை உள்ளது. காற்று அடிக்கிறதே என்று ஆலமரம் அஞ்சி விடுவதில்லை. காற்றையும் தாண்டி அது நிற்கிறது. தாண்டி நிற்பவர்கள்தாம் சாதனை படைக்கிறார்கள். சலிப்பவனும், சளைப்பவனும் சாதனை நிழ்த்துவதில்லை. போய்விட்ட பெருமைகளை தொகுத்துக்கூறி புலம்பாமல், வருங்கால வரலாற்றை வரைகின்ற வல்லமையை என் எழுத்துக்கள் தரும். புத்தகம் சிறியதுதான். ஆனால் காரமான கடுகு. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.