நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ.

இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற செய்திகளும் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. மூர்ஸ் விதயை அடிப்படையாகக் கொண்டு இயற்பியல், உயிரியியல், வேதியியல் போன்ற அறிவியல் துறைகளில், சிறுத்தல் பண்பை ஏற்படுத்தலாம் என்றும், அதனால் அனைத்து அறிவியல் சார்ந்த துறைகளிலும் நேனோ ஊடுருவி உள்ளது என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். விவசாயத்தில் நேனோ தொழில்நுட்பம் மூலம் விதைகளின் மரபணுக்களை மாற்றியமைத்து, விளைச்சலைக் கூட்டலாம் என்றும் நேனோ தொழில்நுட்பத்தால், வேதியியல் தொழிற்சாலைகள், கட்டுமானப் பொருட்கள், போக்குவரத்து, மருத்துவம், விமானம் போன்ற பல்வேறு அன்றாட வாழ்வியல் தேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். நேனோ துகள்களால், தங்கம் நீல நிறத்தில் தோற்றமளிக்கும், நேனோ தங்கத்துக்ள்களை எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டே போனால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கம் தோற்றமளிக்கும் என்ற செய்திகள் வியப்பூட்டுகின்றன. அலுமினியத் துகள்கள், நேனோ அளவிலான அலுமினி நுண்துகள்களாய், எரி வாயுவுடன் வெளியேறி, ராக்கெட்டின் சீரான பாய்ச்சலுக்கு உதவுகிறது என்றும், நேநோ அலுமினா நுண்ககள்காளல், சில நேரங்களில் அபாயங்கள் ஏற்படலாம் என்றும் நூலாசிரியர் வாதங்களை முன் வைக்கிறார். நேனோ திரவத்தைப் பற்றிய செய்திகள், கிரபீன் தகடுகள், கரிகுழாய், கரிஉருண்டை போன்ற நேனோ பொருட்களின் தன்மைகளும் நேனோ தொழில்நுட்பத்தால் எதிர்கால அறிவியல் மாற்றங்களையும் தெளிவாக குறிப்பிடுகிறார். இன்று நாம் வெகுவாக பயன்படுத்தும், அலைபேசி தொடுதிரைகளில், நேனோ பொருளான, கிரபீன் பயன்படுத்தப்படுகிறது என்று இந்த நூல் தெரிவிக்கிறது. சிலந்தி வலைப்பட்டின் உறுதி, தாமரை இலை மேல் ஏன் நீர் ஒட்டுவதில்லை, பல்லி கீழே விழாமல் சுவரில் ஒட்டியிருப்பது எவ்வாறு, வண்ணத்து பூச்சியின் நிறமற்ற வானவில்லைப் பற்றிய குறிப்புகள் போன்ற, இயற்கை நிகழ்வுகளில் நேனோ எவ்வாறு புதைந்துள்ளது என்ற ஆச்சரியமூட்டும் தகவல்களுக்கு பஞ்சமில்லை. 96 பக்கங்களே இருந்தாலும், நேனோ பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை அள்ளித்தெளிக்கும். தரமான அறிவியல் நூல் இது. -பை சிவா. நன்றி: தினமலர்,24/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *