வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள்
வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள், அர்துர் எம்.சிசிங்கர், ஹங்டன் மிவ்லின் பதிப்பகம்
அமெரிக்காவின் இடதுசாரிகள் அர்துர் எம்.சிசிங்கர் எழுதி, ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் வெளியிட்ட வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். அமெரிக்காவில் நிலவும் மேல்தட்டு பொருளாதாரம் – ஆயுத அரசியல் – பெரும் முதல் என்ற கொள்கையில் இருந்து மாறுபட்டு சிந்தித்தவர், கென்னடி. அவர் இடதுசாரி கொள்கையாளர் அல்லர். ஆனால் அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையில் இருந்து மாறுபட்டதால், அந்த நாட்டு அரசியல் சூழலில் இடதுசாரியாகப் பார்க்கப்பட்டார். வெள்ளையர் மத்தியில், மிக நேர்மையாகப் போற்றப்படுபவர் ஆல்பர்ட் மன்னர். அவரை தன் வழிகாட்டியாகக் கருதியவர் கென்னடி. அவரைப் போல அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் இருந்ததாக, நூலாசிரியர் கூறுகிறார். கென்னடி, நிற வேற்றுமையை ஏற்றுக் கொள்ளாதவர். அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏ. வெளிநாடுகளில் செய்யும் மனித உரிமை மீறல்களை, கடுமையாக எதிர்த்தார். என் ஆட்சிக் காலம் முடிவதற்குள், சி.ஐ.ஏ.க்கு முடிவு கட்டுவேன் என, தன் நண்பர்களிடம், கென்னடி கூறினாராம். இந்த நிலையில், தனிமனிதன் ஒருவனால் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். 20ம் நூற்றாண்டில், உலகின் மிகப் பெரிய மனிதர்களில், அமெரிக்க ஜனாபதி ஒருவர். அப்படிப்பட்டவரை, தனிமனிதன் ஒருவன் கொல்கிறான். கொலை நடந்த பின், அதை மூடி மறைக்கும் வேலையைத் தான் அதிகம் செய்தனர். கென்னடியின் சகோதரர், ராபர்ட் கென்னடி ஜனாதிபதி வேட்பாளருக்காக, அவரது கட்சியின் உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார். பெரும் வெற்றிபெற்று வரும் ராபர்ட், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் நிலை ஏற்படுகிறது. ஜான் கென்னடியை விட, இடதுசாரி கொள்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இடத்தில் ராபர்ட் இருந்ததால், அவரும் கொல்லப்படுகிறார். கென்னடி கொலையின் தொடர்ச்சியே ராபர்ட் கென்னடியின் கொலை. அவர்களுக்குப் பின் வந்த, மக்கள் ஆதரவு பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள், சி.ஐ.ஏ. வை எதிர்க்கவில்லை என்பது வரலாறு. -மகிழ் திருமேனி. (திரைப்பட இயக்குனர்.) -திரைப்பட இயக்குனர்.