பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம், சம்ஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html
பள்ளிக்கூடப் பாடங்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்த போதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சம்ஸ்கிருத மொழியில் எழுதியதை மிக எளிமையான முறையில் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் மஞ்சேரி ஈஸ்வரனின் துணைவியார் அன்னபூர்ணா ஈஸ்வரன். மிக விரிவான இந்தத் தமிழாக்கத்தை மிக அர்ப்பணிப்போடு 1958ஆம் ஆண்டில் வெளியிட்டவர் சக்தி காரியாலயம் வை. கோவிந்தன். இப்போது அதேமாதிரியான அர்ப்பணிப்போடு இரண்டாம் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் க்ருஷாங்கினி. இதன் மூலநூல் சம்ஸ்கிருத மொழியோடு நெருங்கிய தொடர்புடைய பைசாச பிராகிருத மொழியில் எழுதப்பட்டு மறைந்தே போய்விட்டது. இது முதன் முதலாக கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பண்டைய பாரசீக மொழியிலும், தொடர்ந்து சிரியாக், அரபு மொழிகளிலும் வெளியானது. 1869ஆம் ஆண்டில் தியோடர் பென்பே என்பவர் ஜெர்மானிய மொழியில் வெளியிட்டார். இதற்கிடையில் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, ஸ்பானிஷ், இத்தாலி, செக் முதலான மொழிகளுக்குப் போய் இன்றைக்கு ஐம்பது உலக மொழிகளில் இருநூறு திருத்தப் பதிப்புக்கள் வெளியாகியுள்ள என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பதிப்புரையில் காணப்படுகிறது. இந்த அரை நூற்றாண்டுக்குள் மேலும் பல மொழிகளில் இது பதிப்பிக்கப்பட்டிருக்கலாம். ஷேமேந்திரர் எழுதிய பிரு ஹத்கதாமஞ்சரி, சோமதேவர் எழுதிய கதாசரித் சாகரம், நாராயணர் வங்கமொழியில் எழுதியஹிதோபதேசம், இன்னும் தந்த்ராக்யாயிகா நூல்கள் தவிர இரண்டு ஜைனத் திருத்தப் பதிப்பக்களும் உண்டு. இரண்டாவது திருத்தப்பதிப்பை பூர்ணபத்திரர் என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதினார். இதையே தமிழாக்கம் செய்திருக்கிறார் அன்ன பூர்ணா ஈஸ்வரன். வெறும் சிறுவர்களுக்கான கதை மட்டுமில்லை பஞ்சதந்திரம், நிர்வாகவியலுக்கான ஒரு குறுகியகாலப் பயிற்சியாகப் பயன்படக்கூடிய நூல் என்கிறார் தமிழில் பல நிர்வாகவியல் நூல்களை எழுதியிருக்கும் டாக்டர் ஆ. நடராஜன். ஐந்துவிதமான தந்திர உபாயங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளைப் போலவே விஷ்ணுசர்மன் இந்த நீதிநூலை எழுதிய கதையும் சுவாரசியமானது. மகிளாரூப்யம் என்னும் நாட்டை ஆண்ட அமரசக்தி என்ற மன்னன் புத்திசாதுர்யமற்ற தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கு அறிவு புகட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிஞர்தான் விஷ்ணுசர்மன். இன்றைக்கு ராஜ குமாரர்கள் மந்திரி குமாரர்களுக்கு மட்டுமில்லை. வீட்டுக்குவீடு விண்ணுசர்மன்கள் நிறையவே தேவைப்படுகிறார்கள். பஞ்சதந்திரம்-சிறு அறிமுகம் என்று பத்து பக்கங்களில் க்ருஷாங்கினி எழுதியுள்ள கட்டுரை மிகவும் அருமை. அரசின் நிதி உதவியோடு இந்த நூல் வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நல்ல பணிகளுக்கும் அரச உதவி கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். சுப்ர.பாலன். நன்றி: கல்கி, 16/6/2013.