பஞ்ச நாராயண கோட்டம்
பஞ்ச நாராயண கோட்டம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
டைரக்டர் சித்ராலயா கோபுவின் மகனும், இந்து நாளிதழின் மூத்த இணையாசிரியருமான காலச்சக்கரம் நரசிம்மா, புகழ் பெற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். பொன்னியின் செல்வனின் வரும் சில கதாபாத்திரங்களை வைத்து, இவர் எழுதிய சங்கதாரா என்ற நாவல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தன் மகள் வசந்திகாவை பிடித்த பேயை விரட்டியடித்த இராமானுஜாசாரியருக்கு, தாசனாக மாறிய சமண மன்னன் பிட்டிதேவன், விஷ்ணு வர்த்தனன் என்கிற வைஷ்ணவனாக மாறுகிறான். இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த சரித்திர நாவலை உருவாக்கியிருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா. சரித்திரக்கதை என்றாலும், எதிர்பாராத திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்து கதை விறுவிறுப்பாக விரைந்து செல்கிறது. சரித்திரக்கதைப் பிரியர்களை மட்டுமின்றி எல்லோரையும் கவரக்கூடிய புதினம். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.
—-
குருவே சரணம், அரக்கோணம் கோ. வீ. சுரேஷ், ராஜமாணிக்கம்மாள் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 40ரூ.
ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த இறுதி தருணத்தில் நடந்த நிகழ்வுகளையும், அந்த சமயத்தில் அவருடைய பிரதான சீடர் அப்பண்ணா மேற்கொண்ட யாத்திரையையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த நேரத்தில் அப்பண்ணா அங்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடியும் பயணிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.